ஓணம் ஏற்றுமதி சரிவால் "மணக்காத' கேந்திப் பூக்கள்! கவலையில் நெல்லை விவசாயிகள்

கேரளத்தில் நிகழாண்டிலும் பெய்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு உள்ளிட்ட இழப்புகளில் இருந்து
ஓணம் ஏற்றுமதி சரிவால் "மணக்காத' கேந்திப் பூக்கள்! கவலையில் நெல்லை விவசாயிகள்

கேரளத்தில் நிகழாண்டிலும் பெய்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு உள்ளிட்ட இழப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வராத சூழலில் ஓணம் பண்டிகை பெரிய அளவில் களைகட்டாமல் உள்ளது. இதனால் ஏற்றுமதி குறைந்து கிலோ ரூ.80-க்கு விற்பனையாக வேண்டிய கேந்திப்பூக்கள் ரூ.30-க்கு விற்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 11 அணைக்கட்டுகள் உள்ளன. இவற்றில் தாமிரவருணி பாசனத்தின் கீழ் உள்ள கால்வாய் பகுதிகளில் பெரும்பாலும் நெல், வாழை, உளுந்து பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மானாவாரி மற்றும் தோட்டப்பயிர்களாக பருத்தி, வெங்காயம், பாசிப்பயறு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. ஆனால், தகுந்த விலை கிடைக்காததாலும், பருவம் தவறி பெய்யும் மழையாலும் பயறுவகை மற்றும் காய்கறி வகை சாகுபடியில் போதிய வருவாய் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.
ஆகவே, மலர் சாகுபடிக்கு மாறும் விவசாயிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. பிச்சி, மல்லி, கேந்தி, சம்பங்கி, கோழிக்கொண்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலர் வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. திருநெல்வேலி சங்கர்நகர், சிவந்திப்பட்டி, மானூர், பள்ளமடை, அளவந்தான்குளம், பல்லிக்கோட்டை, செட்டிக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகைப் பூ சாகுபடி மிகவும் அதிகமாக உள்ளது. இதேபோல, ராதாபுரம், சங்கரன்கோவில், ஆலங்குளம் வட்டார பகுதிகளிலும் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மானூர் பகுதிகளில் கோழிக்கொண்டை, கேந்தி வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.
"ஓணம்' ஏற்றுமதி: இதுகுறித்து மானூரைச் சேர்ந்த விவசாயி ராமசாமி கூறுகையில், திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி நகரம், சங்கரன்கோவில், ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதிகளில் பூக்களுக்கான சந்தைகள் உள்ளன. கேரளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் உற்பத்தியான பூக்கள் முழுவதையும் மொத்தமாக கேரள வியாபாரிகள் முன்பணம் கொடுத்து கொள்முதல் செய்வது வழக்கம்.  மல்லிகை, பிச்சிப்பூ, கனகாம்பரம், அரளி, கேந்திப் பூ, சம்பங்கி ஆகியவற்றுக்கு அதிக தேவை இருக்கும். குறிப்பாக மிகவும் விலை குறைவாக இருக்கும் கேந்திப் பூக்களை அதிகளவில் கொள்முதல் செய்வார்கள். நிகழாண்டுக்கான ஓணம் பண்டிகை புதன்கிழமை (செப். 11) கொண்டாடப்பட உள்ளதால் கேந்தி பூக்களின் அறுவடை மானூர், திருநெல்வேலி வட்டாரங்களில் அதிகரித்துள்ளது. ஓணம் நாளின் அதிகாலை வரை அறுவடை செய்யப்படும் பூக்கள் அனைத்தும் கேரளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும் என்றனர்.
கேந்திப் பூக்கள் விலை சரிவு: இதுகுறித்து திருநெல்வேலியைச் சேர்ந்த பூ வியாபாரி முருகன் கூறியது: 2018 ஆம் ஆண்டில் பெய்த கனமழை காரணமாக ஓணம் பண்டிகை கால பூக்கள் ஏற்றுமதி மிகவும் சரிந்தது. அதேபோல நிகழாண்டிலும் தென்மேற்கு பருவமழை கேரளம், மகாராஷ்டிரம் மாநிலங்களில் கொட்டித் தீர்த்தது. கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு, இடுக்கி, பத்தினம்திட்டா, கொல்லம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டு மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது. நிலச்சரிவு காரணமாக தண்டவாளங்கள், சாலைகள் சேதமாகியுள்ளதால் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து முழுமையாக சீரடையாமல் உள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து கேரள மார்க்கமாக செல்லும் ரயில்களும், அங்கிருந்து வரும் ரயில்களும் தாமதமாக வந்து செல்கின்றன. இதுபோன்ற காரணங்களால் நிகழாண்டிலும் ஓணம் பண்டிகை பழைய உற்சாகத்துடன் கொண்டாடப்படாமல் உள்ளது. இதனால் பூக்களின் ஏற்றுமதி 2017 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் நிகழாண்டிலும் குறைந்துள்ளது. 
திருநெல்வேலியில் வழக்கமாக ஓணம் பண்டிகை காலத்தில் கேந்திப் பூக்களின் விலை கிலோவுக்கு ரூ.80 வரை உயரும். இப்போது விலை விவசாயிகள் எதிர்பார்த்த அளவில் உயரவில்லை. கிலோ ரூ.30க்குவிற்கப்படுகிறது. இதனால் கேந்திப் பூக்களை அறுவடை செய்து விற்பனைக்காகக் கொண்டு வரும் விவசாயிகள் மிகுந்த கவலையோடு செல்கின்றனர் என்றார்.

வறட்சியால் மாற்றம் 
சேதுராயன்புதூரைச் சேர்ந்த விவசாயி கூறியது; நெல், வாழை போன்றவற்றுக்கு அதிக பாசனநீர் தேவைப்படுகிறது. ஆனால், மலர் சாகுபடியில் குறைந்த தண்ணீர் செலவில் வருவாய் பெறும் வாய்ப்புள்ளது. மல்லிகை, அரளி, கேந்தி உள்ளிட்ட ரகங்களை தினமும் காலையில் 6 மணி முதல் 10 மணிக்குள் பறித்து சந்தைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதுதவிர ஆள்கள் பற்றாக்குறை, போக்குவரத்து செலவு அதிகரிப்பு போன்ற காரணிகளும் மலர் சாகுபடிக்கு சவாலாகத்தான் உள்ளன. இருப்பினும் இப்போதைய பருவநிலை மாற்றத்தால் வாழை போன்ற பணப்பயிர்களை பயிரிடும் விவசாயிகள் நஷ்டம் அடையும்போது மிகவும் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். அந்த அளவிற்கு மலர் சாகுபடியில் நஷ்டம் உருவாகாது. வைகாசி, ஆவணி, பங்குனி, புரட்டாசி, மார்கழி உள்ளிட்ட மாதங்களில் பூக்களின் தேவை அதிகரிப்பதால் ஓரளவு வருவாய் கிடைத்து வருகிறது. குறிப்பாக ஓணம் பண்டிகைக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து அதிகளவில் பூக்கள் ஏற்றுமதியாகின்றன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com