திருநெல்வேலி

கரிவலம்வந்தநல்லூரில் ஆவணி தவசுக் காட்சி

10th Sep 2019 08:43 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி திருக்கோயில் ஆவணி தவசுத் திருவிழாவையொட்டி தவசுக் காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் தவசுத் திருவிழா ஆண்டுதோறும் ஆவணி மாதம் 14 நாள்கள் நடைபெறும். 
நிகழாண்டில் இத்திருவிழா கடந்த  ஆக. 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  தினமும் சுவாமி,அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தனர். 
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தவசுக் காட்சி ஞாயிற்றுக்கிழமை  மாலை நடைபெற்றது.
முன்னதாக சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதியில் அமைக்கப்பட்டிருந்த தவசுப் பந்தலுக்கு வந்தார். அப்போது மண்டகப்படியில் எழுந்தருளியிருந்த ஒப்பணையம்மாள் சப்பரத்தில் எழுந்தருளி எதிர்பந்தலுக்கு வந்தார். அம்பாள், சுவாமியை 3 முறை வலம் வந்த பிறகு சுருள் வழங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து மாலை 6.35 மணிக்கு சுவாமி முகலிங்கநாதராக அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். 
தவசுக் காட்சியை  சங்கரன்கோவில், சுப்புலாபுரம்,  பனையூர், மணலூர், ராயகிரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டு தரிசித்தனர்.  இரவு 10.30 மணிக்கு சுவாமி பால்வண்ணநாதராக அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT