திருநெல்வேலி

விதைப் பண்ணை அமைத்து இருமடங்கு லாபம் ஈட்டலாம்: விதைச்சான்று உதவி இயக்குநர்

7th Sep 2019 10:50 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் எதிர்வரும் பிசானப் பருவத்தில் நெல் மற்றும் உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகள் விதைப் பண்ணைகளை அமைத்து இரு மடங்கு லாபம் ஈட்டலாம் என திருநெல்வேலி விதைச்சான்று உதவி இயக்குநர் சு.சுரேஷ் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விதைப் பண்ணைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள், வல்லுநர் விதைகளைப் பயன்படுத்தி ஆதாரநிலை விதைகளையோஅல்லது ஆதாரநிலை விதைகளைப் பயன்படுத்தி சான்று நிலை விதைகளையோ உற்பத்தி செய்யலாம். ஆதாரநிலை விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களிலும் கிடைக்கின்றன. 
வல்லுநர் விதைகள்  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையங்களிலும், வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் கிடைக்கின்றன. 
விவசாயிகள் தங்களை சாகுபடியாளராக அரசு விதை உற்பத்தியாளரின் கீழோ அல்லது தனியார் விதை உற்பத்தியாளரின் கீழோ பதிவு செய்து கொண்டு விதைப்பண்ணைகளை அமைக்கலாம். இல்லையெனில் விவசாயிகள் தங்களை உற்பத்தியாளராக பதிவு செய்து கொண்டும் விதைப்பண்ணை அமைக்கலாம்.
விதைப் பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் தாங்கள் வாங்கிய ஆதாரநிலை அல்லது வல்லுநர் விதையின் சான்றட்டைகள், விதை வாங்கிய ரசீது,  ஸ்பெக்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்த விதைப்பு அறிக்கையின் மூன்று நகல்கள் ஆகியவற்றுடன் திருநெல்வேலி விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொண்டு விதை உற்பத்தியை தொடங்கலாம்.
நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.60, உளுந்துப் பயிருக்கு ஏக்கருக்கு  ரூ.50 வயலாய்வு கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் ஒரு விதைப்பு அறிக்கைக்கு பதிவுக் கட்டணமாக ரூ.25 மற்றும் விதைப் பரிசோதனைக் கட்டணமாக ரூ.30 செலுத்த வேண்டும்.  ஒரு விதைப்பு அறிக்கையில் அதிகபட்சமாக 25 ஏக்கர் வரை பதிவு செய்துகொள்ளலாம்.
நெல் மற்றும் உளுந்து பயிர்களில் தானியமாக உற்பத்தி செய்வதை விட விதைப்பண்ணைகள் அமைத்து சான்று விதை உற்பத்தி செய்யும் போது அதன் மதிப்பு உயர்ந்து அதிக லாபம் ஈட்டலாம். எனவே வரும் பிசானப் பருவத்தில் விவசாயிகள் விதைப்பண்ணைகள் அமைத்து இரு மடங்கு லாபம் ஈட்டலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT