திருநெல்வேலி

தென்காசி, குற்றாலம் பகுதியில் 18 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

4th Sep 2019 10:19 AM

ADVERTISEMENT

தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் செவ்வாய்க்கிழமை ஊர்வலமாக  எடுத்துச் செல்லப்பட்டு அருகிலிருந்த நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டது. 
விநாயகர் சதுர்த்தியையொட்டி தென்காசி, மேலகரம், இலஞ்சி, குத்துக்கல்வலசை, அழகப்பபுரம், புல்லுக்காட்டுவலசை, மத்தளம்பாறை, கொட்டாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தென்காசி நகருக்குள் வைக்கப்பட்டிருந்த நான்கு சிலைகளும் காசிவிஸ்வநாதர் கோயில் முன் செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தென்காசி-குற்றாலம் சாலையில் உள்ள யானைப்பாலம் சிற்றாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. பிற பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகிலிருந்த நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து முன்னணி நகரத் தலைவர் இசக்கிமுத்து, மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயகுமார், வழக்குரைஞர் சாக்ரடீஸ், நகர பாஜக தலைவர் திருநாவுக்கரசு, சங்கரசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சிவகிரி: வாசுதேவநல்லூர் பேரூராட்சிக்குள்பட்ட நாரணபுரம் தெரு, மேட்டுப்பட்டி, மஞ்சனத்தி கிணற்றுத் தெரு உள்ளிட்ட 8 இடங்களில் கடந்த 1ஆம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
செவ்வாய்க்கிழமை மாலையில் 8 விநாயகர் சிலைகளும் மந்தை விநாயகர் கோயில் முன்பாக கொண்டு வரப்பட்டு, பின்னர், கீழபஜார், அக்ரஹாரம் தெரு, பழைய பேருந்து நிலையம், ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சிந்தாமணி நாத சுவாமி கோயில் அருகேயுள்ள படித்துறையில் விசர்ஜனம் செய்யப்பட்டது. 
ஆலங்குளம்: ஆலங்குளம் பகுதியில் 9 சிலைகள், ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குள் 6 சிலைகள், வி.கே. புதூரில் 1 சிலை,  சுரண்டையில் 1 சிலை என 17 சிலைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த சிலைகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆலங்குளம் முத்தாரம்மன் கோயில் திடலுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ராம்நகர், இடைகால், பள்ளக்கால் பொதுக்குடி வழியாக சென்று பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. 
நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் ஒன்றிய இந்து முன்னணி தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்து ஊர்வலத்தை தொடங்கிவைத்தார். விசுவ ஹிந்து பரிஷத் ஒன்றியத் தலைவர் தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT