திருநெல்வேலி

செங்கல் சூளை நடத்த அனுமதி பெற வேண்டும்: ஆட்சியர்

4th Sep 2019 10:30 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் நாட்டு செங்கல் சூளை அமைக்க மற்றும் சேம்பர் செங்கல் தயாரிக்க உரிய அனுமதி பெறவேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அறிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் நாட்டு செங்கல் மற்றும் சேம்பர் செங்கல் தயாரிப்பாளர்கள் மண் எடுப்பதற்கு சில வரைமுறைகளை அரசு செய்துள்ளது. அதன்படி மண் எடுக்கும் இடத்திற்கான கிராம ஆவண நகல், அடங்கல் நகல், அ-பதிவேடு, பட்டா, பத்திர நகல் மற்றும் புல வரைபடம் ஆகியவற்றுடன் விண்ணப்பக் கட்டணம் ரூ.1,500, பதிவுக் கட்டணமாக நாட்டு செங்கல் சூளைக்கு ரூ.300, சேம்பர் செங்கலுக்கு ரூ.3,000 அரசு கணக்கில் செலுத்த வேண்டும். பணம் செலுத்தியதற்கான செல்லானுடன் விண்ணப்பம் செய்து மாவட்ட ஆட்சியரிடம் பதிவுச் சான்று பெறவேண்டும். 
மேலும் மண் எடுக்க கனிமத் தொகையாக ஆண்டுதோறும் நாட்டுச் செங்கல் சூளைக்கு, 15 அடுப்புகள் வரை ரூ. 10 ஆயிரம், 15 அடுப்புகளுக்கு மேல் ரூ.12ஆயிரம் செலுத்த வேண்டும். சேம்பர் செங்கலுக்கு 16 அடுப்புகள் வரை ரூ. 60 ஆயிரம், 17 முதல் 26 அடுப்புகள் வரை ரூ.75ஆயிரம், 27 அடுப்புகளுக்கு மேல் ரூ.90 ஆயிரம் செலுத்த வேண்டும்.
எனவே, இதுவரை அனுமதி பெறாத நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். உரிய அனுமதி பெறாமல் செங்கல் சூளை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT