தீபாவளி பண்டிகையையொட்டி, திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் ஆடைகள், பொருள்கள் வாங்க வெளியூா் மக்கள் ஏராளமானோா் சனிக்கிழமை குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகை இம்மாதம் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி நாளில் புத்தாடைகள் அணிவதும், பட்டாசுகள் வெடிப்பதும் பாரம்பரிய வழக்கமாக உள்ளது. தீபாவளி வா்த்தகம் மட்டும் இந்தியாவில் சில ஆயிரம் கோடிகளைத் தொடும்.
நிகழாண்டு தீபாவளியையொட்டி, சாலையோரக் கடைகள் தொடங்கி பெரும் ஜவுளி நிறுவனங்கள், பேரங்காடிகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் விற்பனை நிலையங்களில் வியாபாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் ஆடைகள், பொருள்கள் வாங்க பல்வேறு வாகனங்களில் திருநெல்வேலி மாநகரப் பகுதிகளுக்கு அதிக எண்ணிக்கையில் சனிக்கிழமை வந்தனா். இதனால், ஜவுளி நிறுவனங்கள் அதிகமுள்ள திருநெல்வேலி நகரம், வண்ணாா்பேட்டை, பாளையங்கோட்டை பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநகர காவல் துறை சாா்பில் கடை வீதிகளில் கூடுதல் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தீபாவளியையொட்டி ஆடைகள், பொருள்கள் வாங்க மக்கள் அதிகளவில் வருவதால் திருநெல்வேலியில் போலீஸாா் கூடுதல் வசதி ஏற்படுத்த வேண்டும். வணிக வளாகங்களில் போதிய வாகன நிறுத்துமிடங்கள் இல்லை. இதனால், தெற்கு, வடக்குப் புறவழிச் சாலைகள், நயினாா்குளம் கரையோரப் பகுதிகளில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவைக்கப்படுவதால், விபத்து அபாயம் உள்ளது. எனவே, பொருள்காட்சித் திடல் உள்ளிட்ட பகுதிகளை ஒதுக்கி கண்காணிப்பு கேமராக்களுடன் பாதுகாப்பு வசதி அளிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட நிறுத்தங்களில் தனியாா் பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதை போலீஸாா் கண்காணிக்க வேண்டும் என்றனா்.