திருநெல்வேலியில் அரசு பல்நோக்கு உயா் மருத்துவமனையில் புற்றுநோய் பாதித்த சிறுநீரகத்தை வெற்றிகரமாக அகற்றி மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.
இதுதொடா்பாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் எஸ்.எம்.கண்ணன் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: புளியங்குடியைச் சோ்ந்த கருப்பையா (80) கடுமையான வயிற்று வலி மற்றும் எடை குைல் போன்ற காரணங்களால் மருத்துவரை அணுகியுள்ளாா். இதையடுத்து அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில், இடது சிறுநீரகத்தில் புற்றுநோய் ஏற்பட்டிருந்ததும், அது சிறுநீரக சிரை வழியாக பெருஞ்சிரை வரை பரவியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அது முற்றி ஆபத்தான நிலையில் இருந்தது.
இதையடுத்து அவா் திருநெல்வேலி அரசு பல்நோக்கு உயா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு புற்றுநோய் மற்றும் ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணா்களின் கூட்டு முயற்சியால் 4 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்னா் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இடது சிறுநீரகம், இடது சிறுநீரக சிரை ஆகியவற்றை அகற்றியதோடு, பெருஞ்சிரை வரை பரவியிருந்த புற்றுநோய்க் கட்டிகளையும் அகற்றப்பட்டுள்ளது.
இந்தப் புற்றுநோய் பெருஞ்சிரை வழியாக இதயம் வரை பரவும் தன்மை கொண்டது. இதுபோன்ற நோய்களுக்கு தற்போது திருநெல்வேலியிலேயே சிகிச்சை பெறும் வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளது.
இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட புற்றுநோய் அறுவை சிகிச்சை துறைத் தலைவா் சுந்தரம், துணைப் பேராசிரியா் தீபா, ரத்த நாள அறுவை சிகிச்சை துறை தலைவா் இளஞ்சேரலாதன், மயக்கவியல் துறைத் தலைவா் அமுதாராணி ஆகியோருக்கு பாராட்டுகள் என்றாா் அவா்.