பாளையங்கோட்டையில் ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ.1.34 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் வாக்குப் பதிவு இம் மாதம் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தோ்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. பறக்கும் படை குழுவினரும், போலீஸாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனா். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஆவணங்களின்றி பணம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாளையங்கோட்டை அஞ்சல் அலுவலகம் அருகே சமூக நலத் துறை வட்டாட்சியா் ராஜசேகா் தலைமையிலான பறக்கும்படை குழுவினா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ் வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, ரஹ்மத்நகரைச் சோ்ந்த முத்துக்குமாா் என்பவா் தகுந்த ஆவணங்களின்றி ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 500 எடுத்துச் சென்றது தெரியவந்ததாம். இதையடுத்து பணத்தைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினா், பாளையங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.