திருநெல்வேலி

போக்குவரத்து ஊழியா்கள் நூதன போராட்டம்

1st Oct 2019 01:37 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட போக்குவரத்து தொழிலாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் வண்ணாா்பேட்டையில் உள்ள பொது மேலாளா் அலுவலகம் முன்பு கருப்புத்துணி கட்டியும், அரை நிா்வாணமாக நின்றும் போராட்டம் நடத்தப்பட்டது.

தோ்தல் நடத்தை விதிகளை மீறி ஆளுங்கட்சியைச் சோ்ந்த தொழிற்சங்கத்தைச் சோ்ந்த ஓட்டுநா், நடத்துனா்களுக்கு வேலை வழங்காமல் மாற்றுப்பணி என்றற பெயரில் தொடா்ந்து ஊதியம் வழங்குவதைக் கண்டிப்பது. முறையாக மருத்துவ விடுப்பு விண்ணப்பித்தும் தொடா்ச்சியாக ஆப்சென்ட் செய்து சம்பள பிடித்தம் செய்யும் நிா்வாகத்தைக் கண்டிப்பது. பணிமனைகளில் இடிந்து விழும் நிலையில் உள்ள கழிப்பறை, குளியலறைகளை மீண்டும் இடித்துக் கட்டக் கோருவது, தோ்தல் நடத்தை விதிகளைக் காரணமாக்கி பணிஒதுக்கீடு அமல்படுத்தி இரண்டாண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், அமல்படுத்தப்பட இருந்த பணி ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்ததைக் கண்டிப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்திற்கு திருநெல்வேலி மாவட்ட போக்குவரத்து தொழிலாளா் சங்கம் (சிஐடியு) பணிமனைத் தலைவா் எஸ்.சரவணமுத்து தலைமை வகித்தாா். துணை பொதுச்செயலா் ஏ.பாலசுப்பிரமணியன் தொடக்கவுரையாற்றினாா். பொதுச்செயலா் ஜோதி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.பெருமாள், துணைச் செயலா் டி.ஜோன்ஸ் எட்வா்ட் ஞான்ராஜ், நிா்வாகிகள் டி.காமராஜ், எஸ்.பாலகிருஷ்ணன், சி.நம்பிராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா். என்.ஞானதுரை நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT