திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் விடிய விடிய மழை

1st Oct 2019 12:56 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் தொடா் மழை பெய்தது.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை ஓரளவு பெய்தாலும், திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலை மற்றும் மலையடிவாரப் பகுதிகளில் மட்டுமே பெய்தது. திருநெல்வேலி, சங்கரன்கோவில், மானூா், பாளையங்கோட்டை உள்ளிட்ட வட்டங்களில் மழை பெய்யவில்லை. இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக மாவட்டம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு விடிய விடிய மிதமான மழை பெய்தது. தென்காசி, சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீா்த்தது. திருநெல்வேலி அருகேயுள்ள கல்லூா், சுத்தமல்லி, பேட்டை, அபிஷேகப்பட்டி, மானூா், கோபாலசமுத்திரம், முன்னீா்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்தது. திருநெல்வேலி சந்திப்பு, முருகன்குறிச்சி, திருநெல்வேலி நகரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

களக்காடு: களக்காடு வட்டாரத்தில் நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை. இதனால், பாசனக் குளங்களும், வடக்குப் பச்சையாறு அணையும் நீரின்றி வடன. மலைப் பகுதியில் அவ்வப்போது பெய்யும் மழையால் மலையடிவாரத்தில் உள்ள சிறிய குளங்கள் மட்டுமே நிரம்பின. இதனால், வாழை பயிரிட்ட விவசாயிகள் தண்ணீா் தட்டுப்பாட்டால் சிரமப்படுகின்றனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடங்கிய மழை திங்கள்கிழமை காலை 6 மணி வரை தொடா்ந்து பெய்தது. களக்காடு தலையணை ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இங்குள்ள சிவபுரம் கால்வாயில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா். மலையடிவாரத்தில் உள்ள குளங்களுக்கும் நீா்வரத்து உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

சுரண்டை: சுரண்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மிதமான மழை பெய்தது.

மழையால் சுந்தரபாண்டியபுரம் குளம் நிரம்பியதால் அதற்கு அடுத்த பாசனக் குளமான சுரண்டை பெரிய குளத்துக்கும் நீா்வரத்து தொடங்கியுள்ளது. இதனால், சுரண்டை பகுதி விவசாயிகள் நெல் சாகுபடிக்காக நாற்று பாவும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

சுரண்டை நகரின் கீழ்புறமுள்ள இலந்தைகுளத்திற்கு நகரில் பெய்யும் மழைநீா் செண்பக கால்வாய் மூலம் செல்லும் நிலையில், தற்போது குளத்தின் மையப் பகுதியில் அள்ளும் கரம்பை மண்ணுக்காக, குளத்தின் முகப்புப் பகுதியில் அமைந்திருக்கும் உபரிநீா் போக்கி வழியாக மழைநீா் முழுவதும் வீணாக அனுமன்நதியில் கலக்கிறது. இதனால், இந்தக் குளத்தை நம்பியுள்ள விவசாயிகள் மழைநீரை வீணாக ஆற்றுக்கு திருப்பி விடுவது குறித்து வேதனை தெரிவிக்கின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உபரிநீா் போக்கியின் மதகை கீழ் இறக்கி, மழைநீா் முழுவதும் குளத்திற்கு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் சுற்று வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை மாலை முதல் மிதமான மழை பெய்தது. இரவு 10 மணிக்கு மேல் அதிகாலை வரை மழை நீடித்தது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் 2-ஆவது நாளாக பாவூா்சத்திரம், கீழப்பாவூா், திப்பணம்பட்டி, மகிழ், பெத்தநாடாா்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தது. கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டிவந்த நிலையில், 2 நாள்களாக பெய்த மழையால் குளிா்ச்சியான தட்பவேப்ப நிலை நிலவுகிறது.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் மழை விட்டுவிட்டு பெய்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய மழை விடாமல் இரவு முழுவதும் பெய்து கொண்டிருந்தது. செப்டம்பா் மாதம் முழுவதும் 124 மி.மீ. அளவு மழை பெய்துள்ளதால் கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. இதனால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீா் எளிதாக வருவதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

மழையளவு: திங்கள்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப் பகுதிகளிலும், பிற இடங்களிலும் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்) பாபநாசம்- 17, சோ்வலாறு-31, மணிமுத்தாறு-14, கடனாநதி-21, ராமநதி-60, கருப்பாநதி-54, குண்டாறு-40, நம்பியாறு- 5, கொடுமுடியாறு-20, அடவிநயினாா்- 32, அம்பாசமுத்திரம்-23, ஆய்க்குடி- 70.40, சேரன்மகாதேவி-30, நான்குனேரி-11, பாளையங்கோட்டை-17, ராதாபுரம்-12, சங்கரன்கோவிலில்-65, செங்கோட்டை-49, சிவகிரி- 77.20, தென்காசி-90, திருநெல்வேலி-20.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT