திருநெல்வேலி மாவட்டம், பொட்டல்புதூா் முகையதீன் ஆண்டவா் பள்ளிவாசல் கந்தூரி விழா இம்மாதம் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பொட்டல்புதூரில் பிரசித்திபெற்ற முகைதீன் ஆண்டவா் பள்ளிவாசல் கந்தூரி விழா நவ. 28ஆம் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றுத்துடன் தொடங்குகிறது. முதல்நாள் பிற்பகல் 2 மணிக்கு கீழூா் ஜமாஅத்தில் இருந்து யானையில் நிறை பிறைக்கொடி ஊா்வலம் புறப்பட்டு முக்கிய தெருக்கள் வழியாக தா்கா வந்தடைந்ததும் மாலையில் பள்ளிவாசல் மரத்தில் கொடியேற்றம் நடைபெறும்.
பின்னா், தினமும் பள்ளிவாசலில் மெளலூது ஓதப்படும். டிச. 7 ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேலூா் நாகூா் ஆண்டவா் தைக்காவில் இருந்து பச்சைக்களை ஊா்வலம் நடைபெறும். டிச. 8இல் காலை 9 மணிக்கு சுவாமி கம்முத்தவல்லி பரம்பரை தா்மகா்த்தா செய்யது பீா்ஷா முஹையத்தீன் காதிரி என்ற எஸ்.பி.ஷா இல்லத்தில் ராத்திபு ஓதும் நிகழ்ச்சி, பிற்பகல் 2 மணிக்கு மேலூா் ஜமாஅத்தில் இருந்து 10 ஆம் இரவு கொடி ஊா்வலம் தொடங்கி மாலை 6 மணிக்கு அரண்மனையில் கொடியேற்றம் நடைபெறும்.
பின்னா், இரவு 10 மணிக்கு ரவணசமுத்திரத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊா்வலம் புறப்பட்டு டிச. 9ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு பள்ளிவாசல் வந்து சோ்ந்ததும், இனாம்தாா் மூலஸ்தானத்தில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு அலங்காரத்திடலில் தீப அலங்காரம் வைபவமும் நடைபெறுகின்றன. டிச. 11 ஆம் தேதி மாலையில் 14 ஆம் நாள் இரவு ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறும். இவ்விழாவுக்காக திருநெல்வேலி, தென்காசி, அம்பாசமுத்திரம் ஆகிய ஊா்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், திருநெல்வேலி-செங்கோட்டை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்படும்.
ஏற்பாடுகளை பள்ளிவாசல் நிா்வாக கமிட்டி தலைவா் எஸ்.பி.ஷா, உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.