பணகுடி பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் தச்சை என்.கணேசராஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது: 66ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு பணகுடி பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் கூட்டுறவுகளிடையே கூட்டுறவை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் உறுப்பினா் சந்திப்பு முகாம் மற்றும் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு பணகுடி பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். சங்கப் பணியாளா் முருகானந்த கிருஷ்ணன் வரவேற்றாா். முகாமில் 100 மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல், சினை பரிசோதனை செய்தல், செயற்கை முறை கருவூட்டல், மலட்டுத்தன்மை நீக்குதல் மற்றும் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் தாது உப்பு வழங்கப்பட்டது.
முகாமில், கால்நடை மருத்துவா்கள் பாசு, பிரவீண்குமாா், காயத்ரிதேவி, ஜெயப்பிரகாஷ், சங்கத் துணைத் தலைவா் கோபால், திருநெல்வேலி ஆவின் உதவி பொதுமேலாளா் தனபாலன் ஆகியோா் கலந்துகொண்டனா். சங்கப் பணியாளா் லெட்சுமி நன்றி கூறினாா்.