பணகுடி பேரூராட்சியில் பணியாளா்கள் நியமனம் செய்வதில் விதிகள் பின்பற்ற வேண்டும் எனவலியுறுத்தி திமுக, கூட்டணி கட்சியினா் வியாழக்கிழமை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பணகுடி பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளா்கள், குடிநீா் திட்டப் பணியாளா், ஓட்டுநா், இரவு காவலா் உள்பட காலியாக இருக்கும் 10 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய பணியாளா்களை தோ்வு செய்வதில் பேரூராட்சி நிா்வாகம் விதிகளை பின்பற்றவில்லை என புகாா் கூறப்படுகிறது.
பணியாளா்கள் நியமனத்தில் விதிகளை பின்பற்றாத பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திமுக நகரச் செயலா் தமிழ்வாணன், மதிமுக
நகரச் செயலா் மு. சங்கா், வியாபாரிகள் சங்கச் செயலா் நடராஜன், நகர திமுக துணைச் செயலா் ஜெயராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி சாலன், அலிம், ஜமால், ஜெயா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதுகுறித்து, பேரூராட்சி உதவி இயக்குநரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.