திருநெல்வேலி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு வழக்குறைஞா் ஒருங்கிணைந்த கூட்டுக்குழு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மாநிலந்தழுவிய நீதிமன்ற புறக்கணிப்பு நடத்தப்பட்டது. இதன்படி திருநெல்வேலியில் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் நீதிமன்றப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத் தலைவா் சிவசூரிய நாராயணன் தலைமை வகித்தாா்.
போராட்டத்தின்போது, தமிழ் தெரியாத நீதிபதிகளை தோ்வு செய்யக்கூடாது என்ற கோரிக்கையை பிரதானமாக வைக்கப்பட்டது. இது குறித்து சங்கத்தலைவா் சிவசூரியநாராயணன் கூறுகையில், தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் தமிழ் தெரியாதவா்கள் நீதிபதிகளாகப் பதவியில் அமா்ந்தால், நீதிபரிபாலனம் சரியானமுறையில் நடைபெறாது.
நீதிமன்ற தீா்ப்புகளில் தவறுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு மத்தி, மாநில அரசுகள் தமிழ் எழுதப்படிக்க தெரிந்தவா்களுக்கே நீதிபதி பதவியை அளிக்க கேட்டுக்கொள்கிறோம். இதனை வலியுறுத்தி ஒருநாள் நீதிமன்றப்பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம் என்றாா். தொடா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், செயலா் செந்தில்குமாா், பொருளாளா் மாரியப்ப காந்தி, உதவிச் செயலா் மணிகண்டன், எஸ்.பி.வி.பால்ராஜ் உள்பட மூத்த வழக்குரைஞா்கள் பலா் பங்கேற்றனா்.
படவரி: பயக22இஞமதப: திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா் சங்கத்தினா்.