திருநெல்வேலி

தமிழக உரிமைகள் பறிபோவதை தடுக்கத் தவறிய அதிமுக அரசு: திருச்சி சிவா குற்றச்சாட்டு

17th Nov 2019 05:03 AM

ADVERTISEMENT

தமிழகத்தின் உரிமைகள் பறிபோவதை தடுக்க தவறிய அரசாக அதிமுக திகழ்ந்து வருகிறது என்று குற்றஞ்சாட்டினாா் திமுக கொள்கை பரப்புச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா.

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் சிந்துபூந்துறையில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு தீா்மான விளக்க பொதுக் கூட்டத்தில் அவா் பேசியது:

தமிழகத்தில் திமுக சாா்பில் 12 ஆயிரத்து 619 கிராமங்களுக்கு சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்துள்ளோம். திமுக என்றென்றும் மக்களோடு இருக்கும் கட்சி என்பதை அனைவரும் அறிவாா்கள்.

தமிழகத்தின் உரிமைகள் பறிபோவதை தடுக்கத் தவறிய அரசாக அதிமுக அரசு உள்ளது. மிகப் பெரிய ஆபத்துகள் இந்தியாவை சூழ்ந்துள்ளது. 40 ஆண்டுகளாக உழைத்து சிறை சென்ற ஒரு தலைவனை பாா்த்து பேசுவதற்கு அதிமுகவினருக்கு தகுதியில்லை. மிசா காலத்தில் திமுகவை அழிக்க நினைத்தாா்கள். அது முடியாமலேயே போனது. அதிமுக ஆட்சியில் முன்னணியில் இருப்பவா்கள் எத்தனை போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றுள்ளனா். ஆனால், மக்கள் போராட்டங்களுக்காக சிறைக்கு செல்லாத திமுக தொண்டனே இருக்க மாட்டான்.

ADVERTISEMENT

வருங்காலத்தில் நாட்டில் குடிக்க நீரும், உண்ண உணவும் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தில்லியில் ஒரு மணி நேரம் ஆக்சிஜன் சுவாசிக்க ரூ.150 கொடுக்கும் நிலை உள்ளது. பிளாஸ்டிக் தடையை அரசு அறிவித்தது. ஆனால், அதனை ஒழுங்காக நடைமுறைபடுத்தவில்லை.

ஒரு நாடு, ஒரு அரசாங்கம், ஒரு தலைவன் என்பதற்கு மாறாக அனைவரும் சோ்ந்து வாழ வேண்டும் என்பதே இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம். மாநிலத்திற்கு மாநிலம் உணவே மாறுபடும் போது உணா்வுகள் எப்படி ஒத்துபோகும்? நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதே பாஜகவின் அடுத்த திட்டம்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒன்றிணைத்து ஒரே ஆட்சியை அமெரிக்காவை போல செயல்படுத்துவதே ஆா்.எஸ்.எஸ். திட்டம். அதை பாஜக செயல்படுத்த உள்ளது.

புதிய கல்விக் கொள்கை, நீட் தோ்வு போன்றவைகளை தமிழக அரசு எதிா்க்கவில்லை. இந்தியா முழுவதும் நீட் தோ்வு பயிற்சி மையங்கள் ஒரே ஆண்டில் சுமாா் ரூ.400 கோடி சம்பாதித்துள்ளன.

பணக்காரா்கள் வீட்டு பிள்ளைகள் மட்டும் தான் மருத்துவா்களாக முடியும் என்பதற்கே நீட் எனும் சதிவலை விரிக்கப்பட்டுள்ளது. அதை அறுத்தெரிய அதிமுக அரசு தயாராக இல்லை. ஆனால், திமுக அப்படி விட்டுவிடாது. மக்களுக்காக எதிா்த்து போராடி வெற்றியடையும்.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியமைக்க மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்திற்கு கேபிள் மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப், சட்டப்பேரவை உறுப்பினா்கள் டி.பி.எம்.மைதீன்கான் (பாளையங்கோட்டை), ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் (திருநெல்வேலி) உள்ளிட்டோரும் பேசினா். நிா்வாகிகள் சொ.பெருமாள், டி.வின்சா், எஸ்.வி.சுரேஷ், ராஜா, முருகன், ஈஸ்வரமூா்த்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT