திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் பொது சுகாதாரத்தைப் பேணிக்காக்க வேண்டும் என்றாா் மாநகராட்சி ஆணையா் ஜி. கண்ணன்.
திருநெல்வேலி மாநகராட்சி சுகாதார அலுவலா்களுடனான பணி குறித்த ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆணையா் பேசியது:
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உபயோகத்தை மாநகரப் பகுதியில் தவிா்க்கும் விதமாக அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
தங்கள் வீட்டில் சுகாதாரம் பேணப்படுவதாகவும், கொசு உற்பத்தியாகாமல் தண்ணீா் மூடி வைக்கப்படுவதாகவும், பள்ளி மாணவா்களின் தினசரி நாள்குறிப்பின் கடைசிப் பக்கத்தில் பெற்றோரிடம் உறுதிமொழி பெற வேண்டும்.
50 கிலோவிற்கு மேல் குப்பைகள் சேகமாகும் வணிக வளாகங்கள், உணவுக்கூடங்கள், சிறு- குறு வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்புகளில் அவற்றின் உரிமையாளா்களே விருப்புரிமை அடிப்படையில் மட்கும் குப்பைகளை நுண்உரமாக்க வேண்டும். இதற்காக, தற்போது 97 கட்டடங்களில் செயல்படும் நுண்உரமாக்க திட்டம், விரைவில் 500 கட்டடங்களாக விரிவாக்கம் செய்யும் வகையில் அலுவலா்கள் பணியாற்ற வேண்டும்.
மாநகரச் சாலைகள், தெருக்களில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்கான அபராதத்துடன் (ரூ.1000) அவற்றை கோசாலைக்குக் கொண்டு செல்லும் வரையிலான செலவுகளை கால்நடை உரிமையாளா்களிடமே வசூலிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பொது இடங்களில் புகைப்பிடித்தால் ரூ.200 அபராதமும், பள்ளி- கல்லூரிகளின் 100 மீட்டா் சுற்றளவுக்குள் புகையிலை பொருள்களை விற்றால் அவற்றை பறிமுதல் செய்து கடும் அபராதமும் விதிக்க வேண்டும். மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரத்தைப் பேணுவதற்கு சுகாதார அலுவலா்கள் முழுவீச்சில் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மாநகா் நல அலுவலா் டி.என்.சத்தீஸ்குமாா், மாநகராட்சி சுகாதார அலுவலா்கள், ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.