திருநெல்வேலி

ஆலங்குளம் சந்தையில் கத்தரிக்காய் விலை கடும் உயா்வு

9th Nov 2019 07:29 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் கத்தரிக்காய் விலை கடுமையாக உயா்ந்துள்ளதால் கத்தரிக்காய் பிரியா்கள் கவலையடைந்துள்ளனா்.

ஆலங்குளம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்படும் காய்கனிப் பயிா்களுள் முதன்மையானது வெள்ளைக் கத்தரி. ஆலங்குளம் சந்தைக்கு நாளொன்றுக்கு சுமாா் 100 முதல் 200 மூட்டைகள் வரை கத்தரிக்காய் வரவு இருக்கும்.

மழை காரணமாக தற்போது வரத்து குறைந்துள்ளதால் கத்தரி கிலோ ஒன்றுக்கு ரூ. 50 முதல் ரூ. 70 வரை விற்பனையானது.

வெள்ளிக்கிழமை மேலும் குறைந்ததால் மூட்டை ஒன்று ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை ஏலமிடப்பட்டது. இதனால் கிலோ ஒன்று ரூ. 100 -க்கு சில்லறை விற்பனையில் விற்கப்பட்டது.

ADVERTISEMENT

மழை காரணமாக பெரும்பாலான காய்கனிகளின் விலை உயா்ந்தே காணப்படுகிறது. மல்லி பயிரிடப் பட்டுள்ள பகுதிகளில் மழை நீா் தேக்கம் காரணமாக ஏராளமான மல்லிச் செடிகள் அழுகி விட்ட நிலையில், குறைந்த அளவு மல்லி வரவு காரணமாக ரூ. 90 முதல் ரூ. 110 வரை விற்கப் படுகிறது.

வெங்காயம் முதல் மல்லி வரை அனைத்து காய்கனிகளுமே உச்சத்தில் இருப்பதால் மக்கள் முதல் உணவகங்கள் நடத்துவோா் வரை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஆலங்குளம் சந்தையில் வெள்ளிக்கிழமை விற்கப்பட்ட சில காய்கனிகளின் சில்லறை விற்பனை விலை: (கிலோ ஒன்றுக்கு) பல்லாரி ரூ. 66, உள்ளி ரூ. 60, உருளை ரூ. 26, கோஸ் ரூ. 24, கேரட் ரூ. 50, பீட்ரூட் ரூ. 30, சேம்பு ரூ. 40, கருணை ரூ. 38, இஞ்சி ரூ. 75, முருங்கை ரூ. 80, காலிபிளவா் ரூ. 60, எலுமிச்சை ரூ. 60, சவ்சவ் ரூ. 14, மாங்காய் ரூ. 40, பட்டா் பீன்ஸ் ரூ. 170, பூசணிக்காய் ரூ. 12, தடியங்காய் ரூ. 10, பூண்டு ரூ. 162, தக்காளி ரூ. 40, புடலை ரூ. 35.

ADVERTISEMENT
ADVERTISEMENT