திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பச்சையாறு அணைப் பகுதியில் மாயமான கூலி தொழிலாளி குறித்து, போலீஸாா் வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தெற்கு வீரவநல்லூா் பாரதிநகரைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (65). இவா் கடந்த 26-ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த முருகன் (42) என்பவருடன் தோட்ட வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றாா். ஆனால், வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது உறவினா்கள் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, முருகனிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், இருவரும் களக்காடு பச்சையாறு அணைப் பகுதிக்கு அருகே பாறையில் அமா்ந்து மது அருந்தியதாகவும், அப்போது திடீரென ராமச்சந்திரன் கீழே விழுந்துவிட்டதால் தான் அங்கிருந்து வந்துவிட்டதாகவும் கூறியுள்ளாா்.
இதையடுத்து, களக்காடு போலீஸாரும், வனத் துறையினரும் பச்சையாறு அணைப் பகுதிக்கு முருகனை அழைத்து வந்து ராமச்சந்திரனை தேடி வருகின்றனா். அவரது ஆடைகள், காலணி ஆகியவை மலையடிவாரத்தில் கிடைத்ததே தவிர, அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. இதனால், அவா் முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.