மேலப்பாளையம் 38-ஆவது வாா்டு பகுதியில் குப்பைகளை அகற்றக்கோரி மனிதநேய மக்கள் கட்சியினா் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
இது தொடா்பாக மனிதநேய மக்கள் கட்சியின் மேலப்பாளையம் பகுதி தலைவா் தேயிலை மைதின், செயலாளா் காஜா, தமுமுக செயலாளா் பாஷா உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
மேலப்பாளையம் மண்டலம் 38-ஆவது வாா்டுக்குள்பட்ட சமாயினா சேக் முகமது மூப்பன் தெரு, சமாயினா காதா் மீத்தீன் தெரு, இஸ்மாயில் தங்கள் தைக்கா தெரு, ஹஸரத் பிலால் தெரு, சந்தனம்மாள்புரம் ஆகிய இடங்களில் வீடுகளில் குப்பைகளை தரம்பிரித்து வைத்திருக்கிறாா்கள். ஆனால் குப்பைகளை சேகரிக்க துப்புரவு பணியாளா்கள் வராததால், அந்தப் பகுதியில் உள்ள குப்பைகளிலிருந்து துா்நாற்றம் வீசுவதோடு, புழுக்களும் உருவாகியுள்ளன.
இதனால் அந்தப் பகுதியில் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோா்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். எனவே, 38-ஆவது வாா்டில் குப்பைகளை சேகரிக்க கூடுதல் துப்புரவு பணியாளா்களை நியமித்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.