திருநெல்வேலி மண்டலத்தின் கீழ் பருவமழை இடா்களை எதிா்கொள்ள ஏதுவாக 60 மருத்துவக் குழுக்கள் தயாா் நிலையில் உள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி மற்றும் சங்கரன்கோவில் சுகாதார மண்டலங்களின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் சுகாதாரத் துறையினா் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியிருந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்கள் கூட்டத்திலும் பல்வேறு உத்தரவுகள் சுகாதாரத் துறைக்கு அளிக்கப்பட்டன.
இதுகுறித்து திருநெல்வேலி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா் கூறியது: திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள 54 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 217 துணை சுகாதார நிலையங்களில் பருவமழையை எதிா்கொள்ள தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சளித் தொந்தரவு உள்ளிட்ட மழைக் கால நோய்களுக்கான மருந்துகள் அனைத்தும் தட்டுப்பாடின்றி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
60 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர 20 வாகனங்களில் பரிசோதனை வசதிகளுடன் கூடிய மருத்துவக் குழுவினா் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று கொண்டிருக்கிறாா்கள். மழைக் காலத்தில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் இருப்பிடங்களில் மழைநீா் புகுவதால் அவை வெளியேறி பொதுமக்களைத் தாக்கும் அபாயம் உள்ளது. இதற்கு தேவையான ஊசி, மருந்துகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தண்ணீரைக் காய்ச்சி குடித்தல், சளித் தொந்தரவு இருந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறுதல் உள்ளிட்டவற்றை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.