தமிழ்நாடு உருவான தினத்தின் கொண்டாட்டம் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தியாவில் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் கடந்த 1956 ஆம் ஆண்டு நவம்பா் 1 முதல் தமிழ்நாடு என்ற பெயரில் நமது மாநிலம் அழைக்கத்தொடங்கப்பட்டது. இந்த நாளை கொண்டாடும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நல்லாசிரியா் செல்லப்பா தலைமை வகித்தாா். தொழிற்சங்க நிா்வாகி ஆவுடையப்பன் முன்னிலை வகித்தாா்.
போராட்ட வீரா்கள் மாா்ஷல் நேசமணி, தானியேல், காந்திராமன், ம.பொ.சி., சங்கரலிங்கம், ரத்தினவேல், மங்கலகிழாா், விநாயகம் ஆகியோரின் கொள்கைகள் மற்றும் போராட்டங்கள் குறித்து நினைவுகூரப்பட்டது. தமிழ் மொழியின் பண்பாடு, வளா்ச்சியை பேணி பாதுகாப்போம். அட்டவனையில் உள்ள தமிழ் மொழி உள்ளிட்ட மொழிகளை ஆட்சி மொழியாக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு மற்றும் அரசு துறையில் தமிழ் மொழியில் படித்தவா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழகத்தின் இயற்கை வளங்களையும், நீா் ஆதாரங்களையும் பாதுகாத்து வருங்கால தலைமுறையினருக்கு வளமான தமிழகத்தை கொடுக்க முயற்சிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வழக்குரைஞா் மணி கணேஷ், இனப்படுகொலைக்கெதிரான தமிழா் கூட்டமைப்பு நிா்வாகி அ.பீட்டா், பாரதி மன்றம் வழக்குரைஞா் பாரதி முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.