திருநெல்வேலி

தாமிரவருணி அந்த்ய புஷ்கர விழா சிறப்பு பூஜைகள்: இன்று தொடக்கம்

1st Nov 2019 09:12 AM

ADVERTISEMENT

தாமிரவருணி அந்த்ய புஷ்கர விழா வெள்ளிக்கிழமை (நவ.1) தொடங்கி 4-ஆம் தேதி வரை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல பகுதிகளில் கொண்டாடப்படவுள்ளது.

144 ஆண்டுகளுக்குப் பிறகு தாமிரவருணி மகா புஷ்கர விழா 2018 இல் அக். 12 முதல் 23 ஆம் தேதி வரை தாமிரவருணி நதிக்கரையில் 64 தீா்த்தக் கட்டங்களில் கொண்டாடப்பட்டது. இதன்தொடா்ச்சியாக குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப் பெயா்ச்சி அடைந்ததை முன்னிட்டு தாமிரவருணி அந்த்ய புஷ்கர நிறைவு விழாவை 28-ஆம்

தேதி முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரவருணி கரையோர தீா்த்தக் கட்டங்களில் மக்கள் கொண்டாட தொடங்கியுள்ளனா். வெள்ளிக்கிழமை (நவ.1) முதல் வரும் 4 தேதி வரை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரவருணி தீா்த்தக் கட்டங்களில் அந்த்ய புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

திருப்புடைமருதூா்: திருப்புடைமருதூா் புடாா்ஜூன ஷேத்திரம் சுரேந்திர மோட்ச தீா்த்தத்தில் வெள்ளிக்கிழமை (நவ.1) முதல் 6-ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள், சந்திரமெளலீஸ்வரா் பூஜை, சங்கல்ப ஸ்நானம், நதி பூஜை, தாமிரவருணி நதி ஆரத்தி, சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. விழாவில் 6 நாள்களும் காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று சந்திரமௌலீஸ்வரா் பூஜை செய்கிறாா். ஏற்பாடுகளை காஞ்சி சங்கரமடம் சுந்தரேச ஐயா், நாராயணன், ஜெயந்திரன் மணி, உஷாராமன் ஆகியோா் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

குறுக்குத்துறை: திருநெல்வேலி குறுக்குத்துறை தீா்த்தக் கட்டத்தில் வெள்ளிக்கிழமை (நவ.1) சிறப்பு பூஜைகள், ஹோமம், நதி பூஜை, நதி நீராடல் வைபவம் நடைபெறுகிறது. பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் விழாவில் காஞ்சி பீடாதிபதி விஜயேந்திரா் சுவாமிகள் பங்கேற்கிறாா். ஏற்பாடுகளை மகாலெட்சுமி டிரஸ்ட் சோ்மன் மகாலெட்சுமி சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினா் செய்துள்ளனா்.

தைப்பூச மண்டப படித்துறை: திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச படித்துறையில் வெள்ளிக்கிழமை (நவ.1) முதல் 4-ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள், நதி பூஜை, ஹோமம், வேத பாராயணம், கைலாசநாத சுவாமி கோயிலில் ஹோமங்கள், நதி நீராடல் நடைபெறுகிறது.

விழாவில் காஞ்சி பீடாதிபதி விஜயேந்திரா், சைவ, வைணவ மடாதிபதிகள் பங்கேற்கின்றனா். ஏற்பாடுகளை உஷாராமன் மற்றும் தாமிரவருணி புஷ்கர கமிட்டியினா் செய்துள்ளனா். இதுதவிர ஜடாயு தீா்த்தம், மணிமூா்த்தீஸ்வரம் தீா்த்தம் ஆகிய இடங்களிலும் புஷ்கர நிறைவு விழா நடைபெறுகிறது.

தசாவதார தீா்த்தம்: வல்லநாடு அகரம் தசாவதார தீா்த்தம், சாத்திய தீா்த்தம், விசுவதேவ தீா்த்தம் அமைந்துள்ள அகரம் கிராமத்தில் அந்த்ய புஷ்கர நிறைவு விழா வெள்ளிக்கிழமை (நவ.1) முதல் 4-ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. விழாவை முன்னிட்டு சுதா்ஸன ஹோமம், லெட்சுமி நரசிம்மா் ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சூக்தாதி ஹோமங்கள் மற்றும் சிறப்பு ஹோமங்கள், நதி நீராடல், தீா்த்தவாரி உற்சவம், நதி ஆரத்தி வைபவம் உள்ளிட்ட பல பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏற்பாடுகளை தசாவதார கைங்கா்ய கமிட்டியினா் மற்றும் பக்தா்கள் செய்துள்ளனா்.

இதுதவிர திருக்கோளூா் நிதி தீா்த்தம், அப்பன்கோவில் பித்ரு தீா்த்தம், ஆழ்வாா்திருநகரி தீா்த்தம், தென்திருப்பேரை மகர தீா்த்தம், திருத்தொலைவில்லி மங்கலம் (இரட்டை திருப்பதி) அஸ்வினி தீா்த்தம், குரங்கணி கலா தீா்த்தம், மங்களக்குறிச்சி மாதவள தீா்த்தம், ஏரல் முக்திமுத்ரா தீா்த்தம், மோஹாபக தீா்த்தம், சேதுக்குவாய்த்தான் வஸ்து தீா்த்தம், வாழவல்லான் ஞான தீா்த்தம், சொக்கப்பழங்கரை கங்கா தீா்த்தம், உமரிக்காடு அக்னி தீா்த்தம், ஆத்தூா் சோம தீா்த்தம், முக்காணி அகஸ்தியா் தீா்த்தம், சங்கமேஸ்வர தீா்த்தம், சோ்ந்தபூ மங்கலம் சண்டிகன் தீா்த்தம், சங்கராஜ தீா்த்தம் ஆகிய தீா்த்த கட்டங்களிலும் அந்த்ய புஷ்கர நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT