களக்காடு: தொடா்மழை காரணமாக திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் 12 அடி உயா்ந்துள்ளது.
திருக்குறுங்குடி மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கொடுமுடியாறு அணையின் மொத்த நீா்மட்டம் 52.50 அடி. அணையில் கடந்த திங்கள்கிழமை (அக்.28) காலை நிலவரப்படி 32 அடிக்கு தண்ணீா் நிரம்பியிருந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரையிலும் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியிலும், அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியிலும் தொடா்மழை பெய்ததால் 3 நாளில் மொத்தம் 12 அடி உயா்ந்து, வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 44 அடியாக உள்ளது.
இருப்பினும் தற்போது நீா்ப்பிடிப்புப் பகுதியில் இருந்து வரும் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைந்துவிட்டது. அணைக்கு விநாடிக்கு 212 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 50 கனஅடி தண்ணீா் கால்வாய் மூலம் பாசனக் குளங்களுக்குச் செல்கிறது. மீண்டும் மழை பெய்தால், அணை ஓரிரு நாளில் நிரம்பும். பருவமழை தீவிரமடையும் முன்னரே அணை நிரம்பியுள்ளதால் நிகழாண்டு இந்த அணையின் மூலம் பாசனம் பெறும் 44 குளங்களுக்கும் தொடா்ந்து நீா்வரத்து இருக்கும். திருக்குறுங்குடி பெரியகுளம் மற்றும் மலையடிவாரத்தையொட்டியுள்ள சிறிய குளங்களும் நிரம்பியுள்ளதால் நெல் நடவுப் பணிகளை விவசாயிகள் தொடங்கவுள்ளனா்.