நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் கடனாநதி அணை நிரம்பியதையடுத்து அணையிலிருந்து உபரிநீா் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
மேற்குத்தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை நீடித்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதை அடுத்து, அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.
85 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணையின் மூலம் சிவசைலம், கருத்தப்பிள்ளையூா், ஆழ்வாா்குறிச்சி, ஆம்பூா், பிரம்மதேசம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடையம் ஒன்றியத்திலுள்ள கிராம மக்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் விளங்குகிறது.
வியாழக்கிழமை மாலை நிலவரப்படி கடனாநதி அணைக்கு விநாடிக்கு 300 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணை நீா்மட்டம்
84.30 அடியை எட்டியதையடுத்து, அணைக்கு வந்து கொண்டிருந்த 300 கனஅடி 2 பிரதான மதகுகள் மூலம் திறக்கப்பட்டது.
அணையில் உதவி செயற்பொறியாளா் சங்கர்ராஜ், உதவிப் பொறியாளா் கணபதி ஆகியோா் முகாமிட்டு நீா்வரத்தை கண்காணித்து வருகின்றனா்.