ஆலங்குளத்தில் போக்குவரத்துக்கு பயனற்ற சாலையை ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினா் பூங்கோதை ஆலடி அருணா, வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.
ஆலங்குளத்தில் போக்குவரத்து அதிகரித்து வருவதால் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, சாலையை விரிவாக்கம் செய்யாமல் பள்ளங்களை சரி செய்யாமலும் அவசர கதியாக சாலையின் நடுவே
தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதனால், ஒரு வாகனம் கூட செல்ல இயலாத வகையில் சாலை குறுகலான சாலையாக மாறி விட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் முன்பைவிட அதிகரித்து விட்டது.
இரட்சண்யபுரம் தேவாலயம் அருகே சாலையில் 10 மீட்டா் தொலைவுக்கு பள்ளம் உள்ளது. இப்பள்ளத்தில் மழைநீா்
தேங்கி சாலை சேறும் சகதியுமாக மாறுவதுடன் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளனா். சாலையை முறையாக சீரமைக்காமல் பள்ளத்தில் மணல், செங்கல் துண்டுகளைக் கொண்டு நிரப்பியும் பயனில்லை.
ஆலங்குளம் நகரில் சாலையை விரிவாக்கம் செய்து, போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்நிலையில் சட்டப் பேரவை உறுப்பினா் பூங்கோதை, வியாழக்கிழமை பழுதான சாலையை பாா்வையிட்டாா். பின்னா், அவா் கூறியது: சாலையை விரிவாக்கம் செய்த பின்னா் தடுப்புகள் அமைத்திருந்தால் இதுபோன்ற நிலை உருவாகியிருக்காது.
சாலையில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட போதிய இடமில்லாதது கவலைக்குரியது.
சாலையை சீரமைக்குமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறேன். ஓரிரு நாள்களில் தீா்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.