"கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் உதவித்தொகை பெறலாம்'

கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் அரசு உதவித்தொகையுடன் தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி

கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் அரசு உதவித்தொகையுடன் தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி பெறுவதற்காக தேர்வினை எழுத விண்ணப்பங்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செ.மின்னல்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 6ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை சிறந்த தரத்திலான கல்வி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. 2019-20 ஆம் கல்வியாண்டிற்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசு, அரசு உதவிபெறும், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பள்ளிகளில் 5ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளிலிருந்து, தொடக்க கல்வித்துறையின் உதவியுடன் தனித்தேர்வு ஒன்று நடத்தப்பட்டு, வட்டாரத்துக்கு ஒரு மாணவர்-மாணவி வீதம் தேர்வு செய்யப்படுவர். 
அவர்களுக்கு அந்தந்த பகுதிகளின் சிறந்த தனியார் பள்ளிகள் மூலம் 6 முதல் பிளஸ்-2 வரை கல்வி வழங்கப்படும். இத் திட்டத்தில் 6ஆம் வகுப்பில் மட்டுமே மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.
இதேபோல் அரசு, அரசு உதவிபெறும், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அதிக மதிப்பெண் பெற்ற, கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளில் இருந்து மாவட்டத்துக்கு 10 பேர் (3 மாணவிகள் உள்பட) தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தந்த பகுதிகளின் சிறந்த தனியார் பள்ளிகள் மூலம் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு கல்வி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பிளஸ்-1 வகுப்பில் மட்டுமே மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். 
அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழு நிர்ணயம் செய்துள்ள பள்ளி கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் ரூ.15 ஆயிரம் மற்றும் பராமரிப்புக் கட்டணம் ரூ.5 ஆயிரம் ஆகியவை தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுதோறும் வழங்கப்படும்.
மாநில வழி பாடத்திட்டத்தில் கல்வி அளிக்கப்படும். விடுதியில் தங்கிப் பயில்வது கட்டாயமில்லை. ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் எக்காரணம் கொண்டும் வேறு பள்ளியில் சேர்க்கப்படமாட்டார்கள்.  அதற்கான விண்ணப்பத்தை www.tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். மேற்படி பெறப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்திசெய்து உரிய ஆவணங்களுடன் தொழிலாளர் துறை ஒருங்கிணைந்த அலுவலக வளாகம், பிளாக் எண் 39, இரண்டாம் தளம், வசந்தம் காலனி, திருமால்நகர், பாளையங்கோட்டை, திருநெல்வேலி-7 என்ற முகவரியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
6ஆம் வகுப்பில் சேர்வதற்கு மே. 24ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். பிளஸ்-1 வகுப்பில் சேர்வதற்கு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கப் பெற்ற நாளில் இருந்து 15 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com