திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாய நிலத்துக்குள் புகுந்து சேதப்படுத்தும் காட்டு யானைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அகில இந்திய விவசாயிகள் மகா சபையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் மகா சபை சார்பில் அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி மாவட்டத்தில் சிவகிரி முதல் களக்காடு வரையுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதி வனப்பல்லுயிர் பாதுகாப்பு சரணாலயமாக உள்ளது. இங்கு வாழும் பறவையினம், விலங்குகள் ஆகியவற்றுக்கு போதுமான குடிநீர், உணவு வசதிகள் வனத்துறை மூலம் செய்யப்படாததால் காட்டு விலங்குகள் விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
குறிப்பாக யானை, காட்டு மாடு, மிளா உள்ளிட்ட விலங்குகள், தென்னை, மா, வாழை, உளுந்து, கடலை போன்ற பயிர்களைச் சேதப்படுத்திவிட்டு செல்கின்றன. இதனால் மலையடிவாரத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது. விவசாயிகளின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. ஆகவே, இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.