திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பாடத் திட்டக் குழுவில் கல்லூரிப் பேராசிரியர்கள் இடம்பெறும் வகையில் பாடத் திட்டக் குழு மாற்றியமைக்கப்படும் என்றார் துணைவேந்தர் கே.பிச்சுமணி.
சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 49-ஆவது கல்விசார் நிலைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைவேந்தர் கே.பிச்சுமணி தலைமை வகித்தார். பதிவாளர் சந்தோஷ்பாபு முன்னிலை வகித்தார். இதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்வேறு கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் துணைவேந்தர் பேசியதாவது: நிலையான தரம், அது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பயனுள்ள கல்வியால் இந்தியாவில் கல்வியின் தரம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கும், உயர்கல்வி நிறுவனங்களுக்கும் ஆராய்ச்சி என்பது புதிதல்ல. இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சியை அதிகளவில் மேற்கொள்வது அவசியமாகும்.
வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் அடிப்படை மற்றும் பயனுள்ள ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதைப் போல இந்தியாவிலும், தமிழகத்திலும் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்த வேண்டும். ஏராளமான படிப்புகளில் மேற்கொள்ளப்படும் தீவிர ஆராய்ச்சிகள், மாணவர்களிடையே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றார்.
இதன் பிறகு விவாதங்கள் நடைபெற்றன. அப்போது, பல்கலைக்கழகத்தின் இளநிலை மற்றும் முதுநிலை பாடத் திட்டக் குழுவில் பெரும்பாலும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர். அந்தக் குழுவில் கல்லூரிப் பேராசிரியர்களும் இடம்பெறும் வகையில் குழுவை மாற்றியமைக்க வேண்டும். ஏனெனில் கல்லூரிப் பேராசிரியர்கள்தான் அதிகளவில் மாணவர்களோடு பழகுகிறார்கள், அவர்களுக்குத்தான் மாணவர்களின் மனநிலை நன்கு தெரியும் என பல்வேறு கல்லூரிகளின் முதல்வர்கள் வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து அந்தக் குழுவை மாற்றியமைக்குமாறு கல்விசார் நிலைக்குழு தலைவரும், துணைவேந்தருமான கே.பிச்சுமணிக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட துணைவேந்தர், "பாடத் திட்டக்குழுவில் கல்லூரி பேராசிரியர்கள் இடம்பெறும் வகையில் அந்தக் குழு மாற்றியமைக்கப்படும்' என்றார்.
அதன் பிறகு தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. தன்னாட்சிக் கல்லூரிகளில் வரும் ஜூலை 1 முதல் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு பதிவு செய்பவர்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சி பாடத் திட்டக் குழு பரிந்துரைத்துள்ள பாடத்திட்டத்தை தேர்வு செய்து இரண்டு தேர்வுகளை எழுத வேண்டும் என்றார் துணைவேந்தர்.