திருநெல்வேலி

நெல்லை அரசு மருத்துவமனையில் மருத்துவமனை தினக் கொண்டாட்டம்

31st Jul 2019 09:46 AM

ADVERTISEMENT

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த தினத்தை முன்னிட்டு திருநெல்வேலிஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனை தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
மருத்துவமனை முதல்வர் எஸ்.எம். கண்ணன் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பங்கேற்று, அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணியாற்றிய 61 பேருக்கு விருது வழங்கி பாராட்டினார். தொடர்ந்து செவிலியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சீருடைகள் மற்றும் மருத்துவமனை தொழிலாளர்கள் உள்பட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை திட்டத்திற்கான அட்டைகளை வழங்கினார்.
மருத்துவமனை முதல்வர் கண்ணன் கூறியது: திருநெல்வேலி அரசு மருத்துவமனை கடந்த 1958 ஆம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் சுமார் 4 ஆயிரம் வெளிநோயாளிகளும், 1800 உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு சுமார் 15 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். அண்மையில் தொடங்கப்பட்ட பல்நோக்கு உயர்சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் 8 துறைகளுக்கான வெளிநோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. வரும் வாரத்தில் குடல் மற்றும் இரைப்பை மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைத் துறைகளின் உள்நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட உள்ளது என்றார் அவர். மருத்துவ கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். விழாவில், துணை முதல்வர் ரேவதி பாலன், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT