திருநெல்வேலி

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள ரூ. 20 ஆயிரம் நிதியுதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

31st Jul 2019 08:44 AM

ADVERTISEMENT

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரூ. 20 ஆயிரம் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ. 20,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. அதற்கு கிறிஸ்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ், அனைத்து பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இப்புனித பயணம் இஸ்ரேல், எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனித பயணம் வரும் அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக் காலம் 10 நாள்கள் வரை இருக்கும்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். இதற்கான நிபந்தனைகள்,  விதிமுறைகள் மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவற்றை ‌w‌w‌w.​b​c‌m​b​c‌m‌w.‌t‌n.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். இத்திட்டத்திற்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் "ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம்-2019- 20' என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கலசமகால் பாரம்பரிய கட்டடம், (முதல் தளம்), சேப்பாக்கம், சென்னை - 5 என்ற முகவரிக்கு வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம். சிறுபான்மையினர் நல இயக்குநரக தொலைபேசி எண்ணிலும் (044-28520033) தொடர்புகொள்ளலாம்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT