திருநெல்வேலி

"கார்பருவ நெல் நாற்றுவிட இயலாத விவசாயிகளும் பயிர்க் காப்பீடு செய்யலாம்'

31st Jul 2019 07:31 AM

ADVERTISEMENT

கார் பருவத்தில் நெல் நாற்றுவிட இயலாத விவசாயிகளும் பயிர்க் காப்பீடு செய்யலாம் என திருநெல்வேலி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் (பொ) முகைதீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது தென்மேற்குப் பருவமழை பொய்த்ததால், அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை. செங்கோட்டை, தென்காசி, அம்பாசமுத்திரம், கடையம், சேரன்மகாதேவி, கடையநல்லூர் பகுதிகளில் உள்ள நெல் நாற்றுகள் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் நடவு செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும், இம்மாவட்டத்தில் கார் சாகுபடி செய்யப்படும் பெரும்பாலான வட்டாரங்களில் நெல் நாற்றுவிட இயலாத சூழ்நிலை உள்ளது.
நெல் நாற்றுவிட இயலாத மற்றும் நெல் நாற்று விட்டு நடவு செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ள அனைத்து விவசாயிகளும் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இதற்கு விவசாயிகள் தாங்கள் நெல் சாகுபடி செய்யும் வருவாய் கிராமம், அறிவிப்பு செய்யப்பட்ட கிராமம்தானா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். நெற்பயிருக்கு ஓர் ஏக்கருக்கு ரூ. 564-ஐ பிரீமியமாக செலுத்தி பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் சேரவேண்டும். நெற்பயிர் காப்பீடு செய்வதற்கு கடைசி நாள் ஆகஸ்ட் 16. 
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து வறட்சி நீடிக்கும்பட்சத்தில், நெல் பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டுத் தொகையில் (ரூ. 28,200) 25 சதவீதம் இழப்பீட்டுத் தொகையாக (ரூ. 7050) கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த வாய்ப்பை தகுதியுள்ள விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இத்திட்டத்தில் கடன் பெறும் விவசாயிகள், தாங்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் தங்களை பதிவு செய்துள்ளார்களா என்பதை கட்டாயமாக உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும், விவசாயிகள் பொது சேவை மையத்திலும் பிரீமியம் தொகை செலுத்தி பயிர்க் காப்பீடு செய்யலாம்.
எனவே, அனைத்து விவசாயிகளும் தவறாமல் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறவும், கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ளவும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT