நான்கு அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி, சமூக ஆர்வலர்கள் முக்கூடலில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கூடலில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகத்தை வீரவநல்லூருக்கு இடம் மாற்றக் கூடாது; அரசு உதவிபெறும் சொக்கலால் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்; முக்கூடலில் இருந்து ராணி மகளிர் கல்லூரி வரை சென்று வந்த நகரப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்; முக்கூடலில் செயல்பட்டு வரும் பீடித்தொழிலாளர் நல மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமித்து 24 மணி நேரமும் செயல் பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசியல் வேறுபாடின்றி சமூக ஆர்வலர்கள் முருகன், அரிகிருஷ்ணன், பொன்ராஜ், கணேசன், கோவில் பிள்ளை, சந்திரன், வழக்குரைஞர் பிரவின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.