பக்ரீத் பண்டிகை தொடர்பாக மேலப்பாளையம் மண்டல ஜமாஅத் நிர்வாகிகள், தொண்டு நிறுவனங்களுடன் மாநகராட்சி ஆணையர் பெ.விஜயலெட்சுமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
பக்ரீத் பண்டிகை வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆடு, மாடு அறுப்பின்போது ஏற்படும் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி சுகாதாரத்தை பேணும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கு வசதியாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது ஆணையர் பேசியதாவது: மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள 29, 31, 32, 33, 34, 35, 36, 37, 38 ஆகிய வார்டுகளில் இஸ்லாமிய சமுதாயத்தினர் அதிகளவில் வசிக்கின்றனர். பக்ரீத் பண்டிகையின்போது இரண்டு நாள்கள் குர்பானி கொடுப்பதால் ஏற்படும் கழிவுகளை உடனுக்குடன் சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் மாநகராட்சி மூலம் துரிதமாக மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்காக 29, 31, 32, 33, 34, 35, 36, 37, 38 ஆகிய வார்டுகளில் தெரு வாரியாக குர்பானி கொடுப்பவர்களின் முழு விவரப் பட்டியலை தயார் செய்திடவும், விரிப்புகள், பைகள் மாநகராட்சி மூலம் வழங்கவும் தகுந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வார்டு ஒன்றிற்கு தலா ஒரு டிராக்டர் வீதம் 10 டிராக்டர்களும், இறைச்சிக் கழிவுகளை சுகாதாரமான முறையில் ஆழமான குழிகளில் புதைப்பதற்கு பொக்லைன் இயந்திரமும் தயார் நிலையில் வைத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, சுகாதார விழிப்புணர்வுத் துண்டு பிரசுரங்கள் வழங்கவும், ஆட்டோவில் ஒலிபெருக்கி கொண்டு விழிப்புணர்வு விளம்பரம் செய்திடவும், முக்கிய இடங்களில் அலுவலர்களின் செல்லிடப்பேசி எண்கள் குறித்த தகவல் பலகைகளை ஆங்காங்கே நிறுவவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போதுமான அளவு துப்புரவுப் பணியாளர்கள் மற்ற மண்டலங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு துப்புரவுப் பணியை மேற்கொள்வார்கள் என்றார்.
இக்கூட்டத்தில் மாநகர நல அலுவலர் சத்தீஸ் குமார், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையர் சுகிபிரேமலதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.