ஆலங்குளம் சட்டப் பேரவைத் தொகுதி, திருநெல்வேலி மாவட்டத்திலேயே தொடர வேண்டும் என வலியுறுத்தி, காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தி முதல்வருக்கு அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக, காங்கிரஸ் தகவல் அறியும் உரிமை சட்டப் பிரிவு மாநில துணைத் தலைவர் பால்ராஜ், ஆலங்குளம் பகுதி மக்களிடம் கையெழுத்து பெற்று முதல்வரின் தனிப் பிரிவுக்கு அனுப்பியுள்ள மனு: ஆலங்குளம் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாகும். இந்தப் பேரவைத் தொகுதியில் கீழப்பாவூர், கடையம், பாப்பாக்குடி ஆகிய ஒன்றியங்கள் உள்ளன. அதில் ஆலங்குளம் ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிகள், 1 பேரூராட்சி, கீழப்பாவூர் ஒன்றியத்தில் 7 ஊராட்சிகள், 1 பேரூராட்சி, கடையம் ஒன்றியத்திலுள்ள 7 ஊராட்சிகள் ஆலங்குளம் வட்டத்திலும், கடையம் ஒன்றியத்தில் 16 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சி அம்பாசமுத்திரம் வட்டத்திலும் உள்ளன. பாப்பாக்குடி ஒன்றியத்தில் 1 பேரூராட்சி, 2 ஊராட்சிகள் சேரன்மகாதேவி வட்டத்திலும், 4 ஊராட்சிகள் ஆலங்குளம் வட்டத்திலும் 9 ஊராட்சி அம்பாசமுத்திரம் வட்டத்திலும் உள்ளன.
எனவே, ஆலங்குளம் தொகுதி தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்திலேயே இணைந்திருந்தால் ஊராட்சி, பேரூராட்சி, ஒன்றிய மற்றும் வட்ட மறுவரையறை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. எனவே தொகுதி மக்களின் விருப்பத்தின் படியும், மறு சீரமைப்பு செய்யாமல் நிர்வாகம் தொடர்ந்து இயங்கவும் ஆலங்குளம் தொகுதி திருநெல்வேலி மாவட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.