திருநெல்வேலி

நாட்டுக் கோழிகளுக்கான கழிச்சல் நோய்த் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

30th Jul 2019 10:02 AM

ADVERTISEMENT

நாட்டுக் கோழிகளை பாதிக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய்க்கான குருணை வடிவ தடுப்பு மருந்து பற்றிய விழிப்புணர்வு முகாம், திருநெல்வேலியை அடுத்த சொக்கட்டான்தோப்பு பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
 புதிய தொழில்நுட்பங்களை பரவலாக்கும் திட்டத்தின் கீழ், “திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், கால்நடை விரிவாக்க கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு, கால்நடை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) ஜே. ஜான்சன் ராஜேஸ்வர்  தலைமை வகித்து,  திட்ட இதழை வெளியிட்டு, குருணை வடிவ தடுப்பு மருந்துகளை கோழிகளுக்கு  வழங்கினார்.
கால்நடை விரிவாக்கக் கல்வித்துறை பேராசிரியரும், தலைவருமான வெ. தனசீலன் வாழ்த்திப் பேசினார்.  திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், கால்நடை விரிவாக்கக் கல்வித்துறை இணைப் பேராசிரியருமான சே.செந்தில்குமார் திட்ட விளக்கமளித்தார். கால்நடை பண்ணை வளாக உதவிப் பேராசிரியர் து. காந்திமதி,  கால்நடை நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியர்  ம. பிரபு ஆகியோர் தொழில்நுட்பம் குறித்துப் பேசினர். கால்நடை  நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் ஜி.பாலகிருஷ்ணன்,  கால்நடை விரிவாக்கக் கல்வித்துறை உதவிப் பேராசிரியர்  ம.பூபதி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். 
முன்னதாக,  கால்நடை விரிவாக்கக் கல்வித்துறை உதவிப் பேராசிரியர்  ஆ. வி. ஜென்சிஸ் இனிகோ  வரவேற்றார். கால்நடை விரிவாக்கக் கல்வித்துறை உதவிப் பேராசிரியர் இரா. சங்கமேஸ்வரன் நன்றி கூறினார்.  இம்முகாமில்  25 நாட்டுக் கோழி வளர்ப்போர் பயன்பெற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT