தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் கடையநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ஜலாலுதீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சுலைமான், பொருளாளர் செய்யதுமசூது, துணைச் செயலர்கள் அப்துல்பாசித், ஹாஜாமைதீன், புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் அப்துல்ரஹ்மான், மாநிலச் செயலர்கள் பாருக், இப்ராஹீம், மாவட்ட துணைச் செயலர் அப்துல் ஸலாம் ஆகியோர் அமைப்பின் செயல்பாடுகள் குறித்துப் பேசினர்.
திருநெல்வேலி- தாம்பரம் வாராந்திர ரயில் கடையநல்லூர், கடையம், சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் நின்று செல்ல வேண்டும். கடையநல்லூரில் மின்மயானம் அமைக்க வேண்டும்.
புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். முஸ்லிம்களின் எதிர்ப்பை மீறி முத்தலாக் தடை மசோதாவை மக்களவையில் நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்தும், இதற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்துக்கு கண்டனம் தெரிவித்தும், தேசிய விசாரணையின் முகமையான தேசிய புலனாய்வு சட்ட திருத்தம் 2019-ஐ கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத் தலைவர் அப்துல்காதர் நன்றி கூறினார்.