களக்காடு பேரூராட்சிப் பகுதி முழுவதும் தாமிரவருணி குடிநீர் விநியோகிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
களக்காடு பேரூராட்சிக்குள்பட்ட 21 வார்டுகளிலும் சுமார் 35 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இம்மக்களுக்கு, தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் நாள்தோறும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், சில ஆண்டுகளாக ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைப்பதே அரிதானது.
இதையடுத்து, தாமிரவருணி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் ஆழ்துளை கிணறு, வடகரை பச்சையாறு தண்ணீரை கலந்து விநியோகிக்கப்படுகிறது. இதனால் குடிநீர் உவர்ப்பாக மாறியதால் மக்கள் அந்த தண்ணீரைக் குடிக்க முடியாமல் விலைக்கு குடிநீரை வாங்கி பருகும் நிலை உள்ளது. எனவே, இப்பேரூராட்சி முழுவதும் தாமிரவருணி குடிநீரை விநியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.