திருநெல்வேலி

கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

30th Jul 2019 07:33 AM

ADVERTISEMENT

கன்னடியன் கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். இக்கூட்டத்தில், கன்னடியன் கால்வாய் விவசாய சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு:
கன்னடியன் கால்வாய் பாசனத்தின் கீழ் சுமார் 12,500 ஏக்கர் பாசன நிலம் உள்ளது. இருபோக விவசாய நிலங்களான இவை விவசாயம் செய்யப்படாமல் வறண்ட நிலையில்  உள்ளன. விவசாயிகள் கால்நடைகளுக்கு தீவனமின்றி சிரமப்படுகின்றனர். கால்வாயில் 10 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிட்டால், இந்த நிலங்களில் தீவனங்களாவது கால்நடைகளுக்கு கிடைக்கும் என்பதால் தண்ணீர் திறக்க வேண்டும்.
கால்வாயில் மாசு: நெல்லை மாவட்ட பொதுநல அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனு: வீ.கே.புதூரில் உள்ள கால்வாய் மூலம் தண்ணீர்  வீராணம் குளத்தை அடைந்து அங்கிருந்து 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெற்று வந்தன. இந்நிலையில், வீ.கே.புதூர் பகுதியில் குப்பைகள், கழிவுநீர் போன்றவை கால்வாய்க்குள் நேரடியாக கலக்கிறது. இதைத் தடுக்கவும், கால்வாயை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீ.கே.புதூரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மேல்நிலை வகுப்புகளுக்கு நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் மாணவர்களின் கல்வித் தரம் குறைந்து வருகிறது. இதுதவிர, சுயநிதி பிரிவு வகுப்புகளுக்கான ஆசிரியர்களையும் நியமித்து பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள கிராம மக்களின் குழந்தைகளுடைய கல்விக் கட்டண சுமையை குறைக்க வேண்டும்.
தெப்பக்குளத்தைச் சீரமைக்கக் கோரிக்கை: வீ.கே.புதூரைச் சேர்ந்தவர்கள் அளித்த மனு: வீ.கே.புதூரில் பழைமையான நவநீதகிருஷ்ண சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயில் தெப்பக்குளத்தின் தண்ணீர் திடீரென கடந்த 25ஆம் தேதி இளஞ்சிவப்பு நிறத்துக்கு மாறியுள்ளது. இதனால், நிலத்தடிநீர் மாசு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பக்கத்தில் உள்ள விவசாய நிலங்களின் தண்ணீரும் மாசு அடையும் நிலையில் உள்ளது. எனவே, இந்த குளத்தை தூர்வாரி கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த அனுமதிக்க வேண்டும். 
மரம் வளர்க்க கோரிக்கை: ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த  பி. ராமன் கோரிக்கை பதாகையுடன் வந்து அளித்த மனு: திருநெல்வேலி அருகேயுள்ள ராஜவல்லிபுரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக மரம் வளர்க்கும் பணியை செய்து வருகிறேன். அரசு, வேம்பு, அத்தி, மருதாணி, வில்வம் உள்ளிட்ட பல்வேறு வகையான 100-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு பராமரித்து வருகிறேன். மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆட்சியர் தலைமையில் ராஜவல்லிபுரத்திற்கு வந்து மரக்கன்று நடவேண்டும்.
ரேஷன் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு: நான்குனேரி வட்டம், பார்ப்பரம்மாள்புரம் மற்றும் பதைக்கம் கிராம மக்கள் அளித்த மனு: பதைக்கம் ஏ.டி. காலனி, பார்ப்பரம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கான ரேஷன் கடை சுமார் 1.5 கி.மீ. தொலைவில், பதைக்கம் கிராமத்தின் வெளிப்புறத்தில் உள்ளது. 
இந்நிலையில் ரேஷன் கடை இருக்கும் பகுதியில் இப்போது தாமிரவருணி-நம்பியாறு-கருமேனியாறு வெள்ளநீர்க் கால்வாய்த் திட்டத்தின் கீழ் கால்வாய் தோண்டும் பணி நடைபெறுகிறது. இதனால் ரேஷன் கடையை எங்கள் கிராமத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள பதைக்கம் கிராமத்தின் உள்பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பெண்கள், முதியவர்கள் சென்று அத்தியாவசிய பொருள்களை வாங்கி வருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். எனவே, தற்காலிகமாக பதைக்கம் ஏ.டி.காலனியில் ரேஷன் கடை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குளம் தூர்வார அனுமதி தேவை: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.எம்.சிவக்குமார் தலைமையில் அளிக்கப்பட்ட மனு: நான்குனேரி வட்டம், தோட்டாக்குடி ஊராட்சிக்குள்பட்ட மருதகுளம் கிராமத்தில் உள்ள பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான குளத்தை இலவசமாக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தூர்வார விரும்புகிறோம். இதற்கு உரிய அனுமதி அளிக்க வேண்டும்.
ஆலங்குளத்தை இணைக்க கோரிக்கை: ஆலங்குளத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் பால்ராஜ் தலைமையில் அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆலங்குளம் திருநெல்வேலி மாவட்டத்திலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது ஆலங்குளத்தின் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுதொடர்பாக  முதல்வருக்கும் மனு அனுப்பியுள்ளோம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT