ஆலங்குளத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் ரத்த தான முகாம் நடைபெற்றது.
காமராஜர் பிறந்தநாளையொட்டி, ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளை தலைவர் ஏ.எஸ். சங்கர் தலைமை வகித்தார். நாடார் சங்க நிர்வாகிகள் செல்வராஜ், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வியாபாரிகள் சங்க நிர்வாகி உதயராஜ், அமமுக நகரச் செயலர் சுப்பையா, தென்காசி செஞ்சிலுவை சங்க நிர்வாகி சுப்பிரமணியன், அந்தோணிராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
முகாமில் 26 வயதுக்கு மேற்பட்ட 42 பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் கண்டறியப் பட்டால் முற்றிலும் குணமாக்க முடியும் என மருத்துவர் எம். அபிராமி தெரிவித்தார். மேலும் 17 பேர் ரத்த தானம் அளித்தனர்.
திருநெல்வேலி புற்றுநோய் மையம், ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளை, சத்ய உணர் அறக்கட்டளை, தென்காசி இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய முகாம் ஏற்பாடுகளை பி. முருகன் செய்திருந்தார்.