திருநெல்வேலி

பக்தர்கள் வருகை அதிகரிப்பு: காரையாறுக்கு தனியார் வாகனங்கள் செல்லத் தடை

29th Jul 2019 07:15 AM

ADVERTISEMENT

ஆடி அமாவாசையை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, தனியார் வாகனங்கள் மலைப் பாதையில் செல்ல வனத் துறை விதித்துள்ள தடை ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வந்தது.
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஜூலை 17இல் கால்நாட்டப்பட்டு, தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் கோயில் அருகில் குடில்கள் அமைத்து குடும்பத்தினருடன் தங்கியிருந்து வழிபட்டு வருகின்றனர்.
ஆடி அமாவாசைக்கு பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவதையடுத்து ஞாயிற்றுக்கிழமை முதல் அனைத்துவித தனியார் வாகனங்களும் கோயிலுக்குச் செல்ல வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். 
கோயிலுக்கு வரும் தனியார் வாகனங்கள் அகஸ்தியர்பட்டியில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 
மேலும், பேருந்தில் செல்லும் பக்தர்களிடம் பாலிதீன், பிளாஸ்டிக், மது, பீடி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் உள்ளனவா என்று வனத் துறையினர் பலத்த சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர். 
இந்தப் பணியில் வனத் துறை அதிகாரிகள், ஊழியர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள், நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் உள்பட சுமார் 400 பேர் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, கோயில் பகுதியில் தங்கியிருக்கும் பக்தர்களுக்கு கழிப்பறை, குடிநீர் வசதிகளை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
ஆடி அமாவாசைக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவதால், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) முதல் ஆகஸ்ட் 3 வரை அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT