திருநெல்வேலி

நெல்லையில் காங்கிரஸின் முப்பெரும் விழா

29th Jul 2019 10:20 AM

ADVERTISEMENT

காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் சார்பில்  நலத்திட்டங்கள் வழங்குதல், விருது வழங்குதல், பட்டிமன்றம் என முப்பெரும் விழா, திருநெல்வேலி சங்கீத சபாவில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், மக்களவை உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டத் தலைவர்கள்  எஸ்.பழனி நாடார் (மேற்கு), "எஸ்.கே.எம்.சிவக்குமார் (கிழக்கு), மேற்கு மாவட்ட பொருளாளர் எஸ்.பி.முரளி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருநெல்வேலி மாநகர மாவட்டத் தலைவர் கே.சங்கரபாண்டியன் வரவேற்றார். மாநில செயல்தலைவர் எஸ்.ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் ஜே.ஜி.பிரின்ஸ், எஸ்.ராஜேஷ்குமார், முன்னாள் எம்.பி. ராமசுப்பு உள்ளிட்டோர் பேசினர்.
விழாவில், சுமார் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  கட்சியில் சிறப்பாக பணியாற்றிய தொண்டர்கள் 15 பேருக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது.
சாலமன் பாப்பையா தலைமையில், "காமராஜரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் ஆட்சிப் பணியே -அரசியல் பணியே' என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்ற பேச்சாளர் ராஜா உள்பட 6 பேர் இரண்டு அணிகளாக வாதிட்டனர்.  இதில், காமராஜரின் நிலைத்த புகழுக்கு  ஆட்சிப் பணியே காரணம் என நடுவர் தீர்ப்பளித்தார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இலவசமாக  மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.  மாநகர் மாவட்டப் பொருளாளர் எஸ்.ராஜேஷ் முருகன், மாநகர் மாவட்ட பொதுச்செயலர் ஏ.சொக்கலிங்ககுமார், மாநகர் மாவட்ட ஊடகப் பிரிவு சி.பிரியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி: முன்னதாக, செய்தியாளர்களிடம் ஹெச். வசந்தகுமார் எம்.பி. கூறியதாவது: தமிழகத்தில் நடைபெற்று வரும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களுக்கு மதுக்கடைகள்தான் காரணம். மதுவை ஒழித்தால் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம். இது தொடர்பான விழிப்புணர்வு தேவை. கர்நாடகத்தில் எத்தனை குழப்பங்கள் வந்தாலும் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.  தமிழகத்தில் இருமொழிக்கொள்கைதான் இருக்க வேண்டும். தேவைப்பட்டவர்கள் வேறு மொழிகளில் படிக்கலாம். யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்றார் அவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT