திருநெல்வேலி

கூட்டுறவு கடன் சங்கங்களில் ஆதார் திருத்த சேவை தொடங்கப்படுமா?

29th Jul 2019 07:19 AM

ADVERTISEMENT

ஆதார் அட்டையில் திருத்தம் கோரி, ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அஞ்சல் நிலையங்களில் இயங்கி வரும் இ-சேவை மையங்களில் பலமுறை விண்ணப்பித்தும் திருத்தம் செய்வதில் குளறுபடி ஏற்படுவதால் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால், கிராமப்புறங்களில் இயங்கி வரும் கூட்டுறவு கடன் சங்கங்களில் ஆதார் திருத்தம் சேவை தொடங்கப்பட வேண்டும் என மக்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆதார் அட்டையின் தேவை கடந்த 2 ஆண்டுகளாக அதிகரித்து, அனைத்துத் தேவைகளுக்கும் ஆதார் அவசியமான ஒன்றாகிவிட்டதால் ஏராளமானோர் திருத்தம் கோரி இ-சேவை மையங்களுக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். 
ஆனால் பலமுறை தங்களிடம் உள்ள ஆவணங்களைக் கொண்டு திருத்தம் கோரி விண்ணப்பித்தும் ஒவ்வொரு முறையும் காரணம் ஏதும் கூறப்படாமலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், மீண்டும் திருத்தம் கோரிக்கை அனுப்புமாறும் தகவல் அனுப்பப்படுகிறது. இதனால் திருத்தம் கோரி விண்ணப்பம் செய்பவர்கள் பெரிதும் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
ஆதாரை திருத்தம் செய்து விட்டால், அதனை வைத்துத்தான் ஏனைய பிற ஆவணங்களையும் திருத்தம் கோரி விண்ணப்பிக்க முடியும் என்பதால் பலர் ஆதார் திருத்தம் செய்ய ஆண்டுக்கணக்கில் அலைந்து திரிகின்றனர். ஆனால் தீர்வு கிடைத்தபாடில்லை. 
இ-சேவை மைய பற்றாக்குறை:ஆதார் திருத்தம் சேவை மாவட்டத்தில்  சில குறிப்பிட்ட அஞ்சல் நிலையங்களில் மட்டுமே உள்ளது. நான்குனேரி வட்டாட்சியர் அலுவலக ஆதார் சேவை மையம் கடந்த பல மாதங்களாக செயல்படவில்லை. அஞ்சல்நிலையங்களிலும் பணியாளர் பற்றாக்குறை, இயந்திர கோளாறு உள்ளிட்ட  காரணங்களால் இந்த சேவை அடிக்கடி தடைபடுகிறது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆதார் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கூட்டுறவு கடன் சங்கங்களில் செயல்படும் இ-சேவை மையத்தில் ஆதார் திருத்தம் சேவை தொடங்கப்பட்டால் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பெரிதும் பயன்பெறுவர். மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் நலன்கருதி ஆதார் திருத்த சிறப்பு முகாம்களை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT