திருநெல்வேலி

கடையத்தில் திருக்குறள் வகுப்பு நிறைவு விழா

29th Jul 2019 07:10 AM

ADVERTISEMENT

கடையம் திருவள்ளுவர் கழகம் சார்பில் நடைபெற்று வந்த திருக்குறள் வகுப்பு நிறைவு விழா மற்றும் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடையம் திருவள்ளுவர் கழகம் சார்பில் 2018, ஆகஸ்ட் 5 முதல் வாரம் தோறும் சனிக்கிழமை திருக்குறள் வகுப்பு நடைபெற்று வந்தது. வகுப்பில் பேராசிரியர் அறிவரசன் திருக்குறள் தெளிவுரை வழங்கினார். 51 வாரங்கள் நடைபெற்ற திருக்குறள் வகுப்பின் நிறைவு விழா மற்றும் பேராசிரியர் அறிவரசனுக்குப் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடையம், வடக்குத் தேர்த் தெரு, குறளகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, கடையம் திருவள்ளுவர் கழகத் தலைவர் ஆ.சேதுராமலிங்கம் தலைமை வகித்தார். தென்காசி, திருவள்ளுவர் கழகச் செயலர் ஆ.சிவராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பேராசிரியர்அறிவரசனுக்கு பைந்தமிழ்ப் பகலவன் பட்டம் வழங்கிப் பாராட்டினார். ஆழ்வார்குறிச்சி, திருவள்ளுவர் கழகப் பொருளாளர் மு.சுந்தரம், செயலர் கு.மா.சங்கரநாராயணன், பேராசிரியர் பழனிவேல் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். தொடர்ந்து பேராசிரியர் அறிவரசன் ஏற்புரை வழங்கினார். கடையம் திருவள்ளுவர் கழகத் துணைத் தலைவர் க.சோ.கல்யாணி சிவகாமிநாதன் வரவேற்றார். பெ.சின்னச்சாமி நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கடையம் திருவள்ளுவர் கழகப் பொருளாளர் நி.இந்திரசித்து, இணைச் செயலர்கள் செ.சோமசுந்தரம், க.கோபால், க.ம.ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT