திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் பள்ளிதோறும் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழியை மாணவர்கள் எடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பெ.விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி பின் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், விற்பனை ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி திருநெல்வேலி மாநகராட்சியில் இதுவரை 4 ஆயிரத்து 257 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, ரூ.10 லட்சத்து 52 ஆயிரத்து 850 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் செயல்படும் 246 பள்ளிகளில் பிளாஸ்டிக் தடை, துணிப்பைகளின் பயன்பாடு, திடக்கழிவுகளை தீ வைத்துக் கொளுத்துவது, நீர்நிலை மற்றும் சாலையோரங்களில் குப்பைகளைக் கொட்டுவது தவறு என்பது குறித்த உறுதிமொழியை ஒவ்வொரு மாணவர் மாணவிகளும் ஏற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் மாநகராட்சி சார்பில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பிரசுரங்களில் பெற்றோரின் ஒப்புதலையும் கையொப்பமாக பெற்று அந்தந்த தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.