திருநெல்வேலி

நெல்லையில் 10 குளங்களை தூர்வார நடவடிக்கை

27th Jul 2019 10:08 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் மாநகரப் பகுதியில் உள்ள 10 குளங்களை தனியார் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளுக்கு உள்பட்ட நீர்நிலைகளின் கரைகளை வலுப்படுத்துதல், குளங்களில் மழை நீரை தேக்கி வைத்திடும் வகையில் 2 அடி ஆழப்படுத்தி தூர்வாருதல், குளங்களைச் சுற்றிலும், உள்பகுதியிலும் வளர்ந்திருக்கும் தேவையற்ற செடிகளை அகற்றி மண் மேடு சமன்படுத்துதல், குளங்களில் தேங்கியுள்ள தேவையற்ற கழிவுப்பொருள்களை அகற்றுதல் மற்றும் குளங்களின் உள் பகுதியில் மழை நீரைத் தேக்கும் வகையில் குழிகளை அமைத்தல் ஆகிய பணிகளை செய்ய மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலோடு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 
தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், கொடையாளர்கள் ஆகியோர்களின் பங்களிப்போடு இப்பணியினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி மாநகரப் பகுதியில் உள்ள மூளிக்குளம், தேனீர்குளம்,  டவுண் நயினார்குளம், பெரியகுளம், இலந்தைகுளம், கன்னிமார்குளம், வேய்ந்தான்குளம், திருநெல்வேலி வட்டத்தில் உள்ள பாப்பன்குளம், கருவேலங்குளம், வெங்கப்பன் குளம் ஆகிய 10 குளங்களை பொதுமக்கள் பங்களிப்போடு மாநகராட்சி இணைந்து தூர்வாரும் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 
இப்பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் வகையில் பொக்லைன், டிராக்டர், டிப்பர் லாரி ஆகிய இயந்திரங்களை கொடுத்து உதவ வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 
மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு திருநெல்வேலி மாநகராட்சி செயற்பொறியாளரை (திட்டம்)  9442201331 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் பெ.விஜயலெட்சுமி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT