திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் குடிநீர்க் குழாய்களை மாற்ற கோரிக்கை

22nd Jul 2019 10:54 AM

ADVERTISEMENT

மேலப்பாளையத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள குடிநீர்க் குழாய்களை மாற்ற வேண்டும் என தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
நுகர்வோர் கண்காணிப்பகம் அமைப்பு சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ள மனு: மேலப்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களாக மஞ்சள்காமாலை மற்றும் வைரஸ் நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலப்பாளையத்தில் விநியோகிக்கப்படும் குடிநீரில் இருந்து இந்த நோய் பரவுவது தெரியவந்துள்ளது. இந்நிலையில், மேலப்பாளையத்தில் உள்ள சாயன் தரகன் தெரு, ஜமால்லிய்யா தைக்கா தெரு, அசன் தரகன் தெரு, செல்வகாதர் தெரு, ஆலப்பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் மாநகராட்சியால் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரைச் சேகரித்து தரப் பரிசோதனைக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் உள்ள மாவட்ட குடிநீர் சோதனை ஆய்வகத்தில் கொடுக்கப்பட்டது.
அங்கிருந்து கிடைக்கப் பெற்ற ஆய்வறிக்கையில், சம்பந்தப்பட்ட தெருக்களில் குடிநீரில் இரும்புத் துகள்கள் மற்றும் சாக்கடை நீர் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே, மேலப்பாளையம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகள் பழைமையான இரும்பு குடிநீர்க் குழாய்களை உடனடியாக அப்புறப்படுத்திவிட்டு புதிய தரமான குழாய்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT