திருநெல்வேலி

அழகப்பபுரம் ஊராட்சிப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை: மாணவர்கள் அவதி

22nd Jul 2019 08:02 AM

ADVERTISEMENT

கடையம் அருகேயுள்ள அழகப்பபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.
கடையம்  ஒன்றியம், தர்மபுரம் மடம் ஊராட்சி, அழகப்பபுரத்தில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மலையடி கிராமமான இந்தப் பகுதியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 38 மாணவிகள் உள்பட 75 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு பணியாற்றி வரும் இரு ஆசிரியர்களில் ஒருவர் மட்டுமே தற்போது பள்ளிக்கு வருகிறார். இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், கூடுதல் ஆசிரியரை நியமிக்க வேண்டும் எனவும் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் வேலாயுதம் கூறியது:
அழகப்பபுரம் பள்ளி 40 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் சிறந்த பள்ளிகளில் ஒன்று. 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று அரசு விதி இருந்தும்,  75 மாணவர்கள் உள்ள இப்பள்ளியில் ஒரே ஆசிரியர்தான் பணியில் உள்ளார். மூன்று ஆசிரியர்கள் இருந்த நிலையில் ஒருவர் கடந்தாண்டு பணியிடமாறுதலில் சென்றுவிட்டார். மற்றொரு ஆசிரியர் மருத்துவ விடுப்பில் சென்று பல நாள்களாகின்றன. இதனால், மாணவர்களின் கல்விதான் கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பள்ளிக்கு போதிய ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். இல்லையெனில், மாணவர்கள், பெற்றோரைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT