திருநெல்வேலி

பதாகை வைத்தபோது விபரீதம்: மின்சாரம் பாய்ந்து இருவர் பலி

16th Jul 2019 10:17 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், சுரண்டையில் காமராஜர் பிறந்த தினத்தையொட்டி பதாகை வைத்தபோது, மின்சாரம் பாய்ந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
சுரண்டை வரகுணராமபுரத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன்(32), மணிகண்டன்(27), அரவிந்தன்(27). நண்பர்களான இவர்கள் 3 பேரும் அங்குள்ள காமராஜர் ரத்த தானக் கழகம் என்ற அமைப்பின் மூலம் ரத்த தானம் செய்து வந்தனர். திங்கள்கிழமை காலையில் காமராஜர் பிறந்த தினத்தையொட்டி,  அந்த அமைப்பின் சார்பில் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு அங்குள்ள திடல் அருகே 30 அடி உயர டிஜிட்டல் பதாகையை கட்ட முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக பதாகை காற்றில் அசைந்ததில் அருகே சென்ற மின்கம்பியில் உரசியதாம். பதாகையின் விளிம்புகளில் இரும்புக் குழாய் இருந்ததால் மூவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த மூவரையும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே சரவணனும், மணிகண்டனும் இறந்தனர். அரவிந்தன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இந்த விபத்தில் பலியான இருவரின் உடல்களும் பிரேத  பரிசோதனைக்குப் பின்  திங்கள்கிழமை மாலை சுரண்டை மயானத்துக்கு தகனம் செய்ய கொண்டுவரப்பட்டன. அங்கு, திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் இருவரின் உடலுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT