திருநெல்வேலி

தேசிய மொழியாகும் தகுதி தமிழுக்கு உள்ளது: திருநாவுக்கரசர் எம்.பி.

16th Jul 2019 10:18 AM

ADVERTISEMENT

செம்மொழியான தமிழுக்கு தேசிய மொழியாகும் தகுதி உள்ளது என்றார் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. திருநாவுக்கரசர்.
திருநெல்வேலி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், பாவூர்சத்திரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற காமராஜர் பிறந்த தின விழாவில் பங்கேற்று, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. ஹிந்தியை விரும்பிப் படிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், மத்திய பாஜக அரசு ஹிந்தியை திணிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. 
செம்மொழியான தமிழுக்கு தேசிய மொழியாகும் தகுதி உள்ளது. மத்திய அரசு தமிழுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
கர்நாடக அரசியலில் பாஜகவின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. 2ஆவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பாஜக, ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்ற இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது.
தமிழகத்தை தவிர, வடமாநிலங்களில் இரண்டாம்கட்ட தலைவர்களின் தேர்தல் பணி எதிர்பார்த்த அளவில் இல்லாததால், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு தோல்வி ஏற்பட்டது என்றார் அவர்.
நிகழ்ச்சியில், கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் எஸ். பழனிநாடார், நிர்வாகிகள் வைகுண்டராஜா, ஜேசுஜெகன், முரளிராஜா, பால்துரை, ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT