காமராஜர் பிறந்த தினத்தையொட்டி, திங்கள்கிழமை அவரது சிலைக்கும், உருவப்படத்துக்கும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தென்காசி காந்தி சிலை முன்பு நகர காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் காதர்மைதீன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், நெல்லை மேற்கு மாவட்ட பொதுச்செயலர் கணேசன் உள்ளிட்டோர் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தனர்.
திருநெல்வேலி மேற்கு மாவட்ட தமாகா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் அய்யாத்துரைபாண்டியன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் வின்சென்ட் முன்னிலை வகித்தார். மாநிலச் செயலர் சார்லஸ் சிறப்புரையாற்றினார். குத்துக்கல்வலசையில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்டச் செயலர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில், காமராஜர் சிலைக்கு அக்கட்சியினர் மாலை அணிவித்தனர்.
அம்பாசமுத்திரம்: நகர காங்கிரஸ் கட்சி தலைவர் முருகேசன் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். சந்திரன் உள்ளிட்டோர் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்தனர். கடையம் வடக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் கீழக்கடையம், சேர்வைகாரன்பட்டி, அருணாசலம்பட்டிஉள்ளிட்ட பகுதிகளில் வட்டாரத் தலைவர் மாரியப்பன் தலைமையில் அக்கட்சியினர் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்தனர். கடையம் தெற்கு வட்டார காங்கிரஸ் சார்பில் மீனாட்சிபுரம், கருத்தபிள்ளையூர், சிவசைலம் ஆகிய பகுதிகளில் அதன் தலைவர் முருகன் தலைமையில் கட்சி கொடியேற்றப்பட்டது.
கடையநல்லூர்: கடையநல்லூர் நகர காங்கிரஸ் சார்பில், நகரத் தலைவர் அசன்இப்ராஹிம் தலைமையில் புதூர் புதிய பள்ளியில் விழா நடத்தப்பட்டு மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
புளியங்குடி நகர காங்கிரஸ் சார்பில் தலைவர் பால்ராஜ் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
சிவகிரி: சிவகிரியில் நகர காங்கிரஸ் தலைவர் வழக்குரைஞர் எம். சண்முகசுந்தரம் தலைமையிலும், வாசுதேவநல்லூரில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் தலைமையிலும் விழா நடைபெற்றது. இதில், மேற்கு மாவட்ட காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுத் தலைவர் என். திருஞானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செங்கோட்டை: வட்டாட்சியர் அலுவலகம் முன், நகர காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் நகரத் தலைவர் ஜோதிராமலிங்கம் தலைமையில் காமராஜர் படத்துக்கு அக்கட்சியினர் மாலை அணிவித்தனர்.